மதுரையில் வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறைக்குள் சென்ற பெண் அதிகாரி : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் போராட்டம்: ஆட்சியரிடம் வேட்பாளர்கள் நள்ளிரவில் புகார்
By DIN | Published On : 21st April 2019 03:12 AM | Last Updated : 21st April 2019 03:12 AM | அ+அ அ- |

மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பாதுகாப்பு அறைக்குள் சென்று, தேர்தல் தொடர்பான ஆவணங்களை பெண் அதிகாரி ஒருவர் நகல் எடுத்ததாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை இரவு போராட்டம் நடத்தினர்.
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் நடந்து முடிந்தது. அன்றிரவு, மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அரசு பெண் அதிகாரி ஒருவர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்குள் சென்று, தேர்தல் தொடர்பான ஆவணங்களை நகல் எடுத்துச் சென்றதாகவும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவக் கல்லூரி நுழைவுவாயில் முன்பாக இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மதுரை மக்களவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் மருத்துக்கல்லூரிக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளவற்றை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் போலீஸாரிடம் வலியுறுத்தினர்.
அதன்படி, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் அனைத்தும் காண்பிக்கப்பட்டன.
இது குறித்து வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறியது:
மதுரை மாவட்ட ஆட்சியரின் உரிய அனுமதியின்றி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 ஆம் தளத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்குள் ஒரு பெண் அதிகாரி மற்றும் 3 ஆண் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
பின்னர், அவர்கள் தேர்தல் தொடர்பான ஆவணங்களை 3 மணி நேரமாகப் பார்வையிட்டுள்ளனர். அதையடுத்து, அந்த ஆவணங்களை கல்லூரி வளாகத்துக்கு வெளியே சென்று நகல் (ஜெராக்ஸ்) எடுத்துள்ளனர். அதன்பின்னரே, போலீஸார் அவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வருவதாகக் கூறிய சிலர், அவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள இந்தப் பகுதியில், ஆட்சியரின் அனுமதியின்றி வந்த 4 அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றார்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், மருத்துவக் கல்லூரி நுழைவுவாயில் முன்பாக பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆட்சியரிடம் நள்ளிரவில் புகார்: இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அமமுக, நாம் தமிழர், மநீம வேட்பாளர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசனுடன் சென்று நள்ளிரவு 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
அப்போது ஆட்சியர், என்னுடைய அனுமதியின்றி இனி யாரும் மருத்துவக் கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என உறுதியளித்தார்.