உயர்அழுத்த மின்கோபுரத்தில் ஏறி இளைஞர் போராட்டம்
By DIN | Published On : 23rd April 2019 07:34 AM | Last Updated : 23rd April 2019 07:34 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் திங்கள்கிழமை உயர் மின்அழுத்த கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஜான்சன்( 25). இவருக்கு ரேணு என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். முகாமில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை தடுக்கச் சென்ற ஜான்சனை சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இங்குள்ள உயர்அழுத்த மின்கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அருண் மற்றும் போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஜான்சனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கீழே இறங்கிவரமாட்டேன் என அவர் போராட்டம் நடத்தினார். சுமார் ஒன்றரை மணி நேரப் பேச்சுவார்த்தைப் பிறகு, மின்கோபுரத்தில் இருந்து ஜான்சனை போலீஸார் கீழே இறங்கி வரச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.