சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம்: சட்டப்படி விசாரணை நடத்தி காவல் ஆய்வாளருக்கு தண்டனை பெற்றுத் தர உத்தரவு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சட்டப்படி விசாரணை நடத்தி திண்டுக்கல் ஆயுதப்படை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சட்டப்படி விசாரணை நடத்தி திண்டுக்கல் ஆயுதப்படை முதல்நிலை காவல் ஆய்வாளருக்கு தண்டனை பெற்றுத் தருமாறு  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் ஆயுதப்படையில் முதல்நிலை காவல் ஆய்வாளராக 11 ஆண்டுகள் பணியாற்றி வருபவர் கருப்பசாமி. இவர் மீது 2012 ஆம் ஆண்டு, ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் கருப்பசாமி அதே ஆண்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றச்சாட்டுக் குறிப்பாணை வழங்கப்பட்டது. 
மேலும் கருப்பசாமி, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து கருப்பசாமிக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. 
இதை எதிர்த்து கருப்பசாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி கருப்பசாமிக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தார். 
இதனை எதிர்த்து தமிழக காவல்துறை தலைவர், திண்டுக்கல் சரக டிஐஜி, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஆகியோர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனு நீதிபதிகள் கே.ரவிசந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கருப்பசாமி சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது என்பது சிறிய அளவிலான தண்டனையாகும். 
இது நீதித்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனுதாரருக்கு ஏன் சிறிய அளவிலான தண்டனை வழங்கப்பட்டது என்பதற்கான காரணங்களும் இல்லை. மேலும் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் தொடக்க நிலையிலேயே முடிவெடுக்கப்பட்டதையும் ஏற்க முடியாது. இரு தரப்பிலும் போதிய காலஅவகாசம் கொடுத்து பதில் மனுக்கள் பெறப்பட்டு முடிவு எடுத்திருக்க வேண்டும். 
எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட குறைந்த அளவிலான தண்டனையை மறுபரிசீலனை செய்து வழக்கை மீண்டும் சட்டப்படி விசாரித்து, குற்றத்திற்கு தகுந்த தண்டனை வழங்குவதற்காக டிஜிபிக்கு இந்த வழக்கு திருப்பி அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com