முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பாரம்பரிய நாட்டு வழக்கப்படியான விவாகரத்து செல்லாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
By DIN | Published On : 04th August 2019 03:57 AM | Last Updated : 04th August 2019 03:57 AM | அ+அ அ- |

மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய நாட்டு வழக்கப்படியான விவாகரத்து செல்லாது என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த பானுமதி தாக்கல் செய்த மனு: எனது கணவர் பாக்கியம், தல்லாகுளம் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கிளையில் பணியாற்றி வந்தார். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் பெயரைப் பணிப் பதிவேட்டில் வாரிசாகக் காண்பித்து பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கிளைஅலுவலகத்தில், நன்னடத்தை விதியை மீறிய எனது கணவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் அதிகாரிகள் 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், மனுதாரருக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்கவில்லை. பாரம்பரிய நாட்டு வழக்கப்படி மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளார். அதனடிப்படையில், பணியிலிருந்து ஓய்வுபெற்று அதற்குரிய பணப்பலன்களையும் அடைந்துள்ளார்.
இத்தகைய விவாகரத்து சமூகத்துக்கு தீங்கானது. இதை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது. மதுரை குடும்பநல நீதிமன்றம் அளித்த விவாகரத்து செல்லாது என உத்தரவிட்டார்.
பாக்கியம் ஓய்வுபெற அனுமதித்த அலுவலர்கள், மண்டல அலுவலர், கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அலுவலகத்திலும் தங்களின் ஊழியர் 2 ஆவது திருமணம் செய்வது தொடர்பான புகார்கள் வந்தால், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாரிசின் உண்மை தன்மையை ஆய்வு செய்யவேண்டும்.
எனவே மனுதாரர், பாக்கியத்திடம் பராமரிப்புத் தொகை கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டார்.