சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை: மதுரை மாவட்ட ஐயப்ப சேவா சங்கத்தினர் ஆக.7 முதல் தூய்மைப் பணி
By DIN | Published On : 04th August 2019 04:00 AM | Last Updated : 04th August 2019 04:00 AM | அ+அ அ- |

நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மதுரை மாவட்ட ஐயப்ப சேவா சங்கத்தினர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் தூய்மைப் பணி மேற்கொள்கின்றனர்.
நிறைபுத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. அச்சன்கோவில், கொல்லங்கோடு பகுதியில் இருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டுவரப்படும் நெற்கதிர்கள் திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் மூலமாக சபரிமலை கொண்டு செல்லப்படும்.
விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் வேண்டி ஸ்ரீ ஐயப்பனுக்கு நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. பின்னர் இந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் சகல நலமும், வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.
நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு மதுரை மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் சபரிமலையில் தூய்மைப் பணி மேற்கொள்கின்றனர்.
மதுரையில் இருந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு புறப்பட்டு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி எரிமேலி ஐயப்பன் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் துப்புரவுப் பணி மேற்கொள்கின்றனர்.
அன்றைய தினம் இரவு சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆகஸ்ட் 8 ஆம் தேதி, சன்னிதானம், பசுமைக்குளம், மாளிகைபுரத்து அம்மன் கோயில் சன்னிதானப் பகுதிகளிலும், மரக்கூட்டம், அப்பாச்சி மேடு, நீலிமலை கணபதி கோயில், பம்பை நதி பகுதிகளிலும் துப்புரவுப் பணி மேற்கொள்கின்றனர்.
அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாநிலத் தலைவர் மு.விஸ்வநாதன், மதுரை மாவட்டச் செயலர் எஸ்.பி.பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.