பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை: விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 04th August 2019 03:58 AM | Last Updated : 04th August 2019 03:58 AM | அ+அ அ- |

மதுரை வில்லாபுரத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை, மதுரை மாநகரக் காவல் துணை ஆணையர் (மது விலக்கு) ஜானகிராம் தொடக்கி வைத்துப் பேசியதாவது: மதுரையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, மதுரையில் 3 இடங்களில் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெறுகிறது. குழந்தைகள் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து உணவு மற்றும் இதர பொருள்களை வாங்க வேண்டாம் என்றும், அறிமுகம் இல்லாத நபர்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக தொந்தரவு செய்தால், உடனடியாக பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
சமீபத்தில், கோவையில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலியல் குற்றவாளிகள் பல்வேறு வழிகளில் தப்பிக்காமல் இருக்க, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் கடுமையான வழிமுறைகளை உருவாக்கி வருகிறது என்றார்.
இப்பேரணியானது, வில்லாபுரத்தில் தொடங்கி நகரின் முக்கியப் பகுதிகளின் வழியாகச் சென்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராமலிங்கம் தலைமையில் ஏராளமான போலீஸார் கலந்துகொண்டனர்.