மதுரையில் வாகனங்களின் பெருக்கத்தால் காற்று மாசு அதிகரிப்பு

மதுரையில் அதிகரித்து வரும் வாகனங்களால் காற்றில் மாசும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, வாகனங்களை தொடர் சோதனைக்கு உள்படுத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். 


மதுரையில் அதிகரித்து வரும் வாகனங்களால் காற்றில் மாசும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, வாகனங்களை தொடர் சோதனைக்கு உள்படுத்த வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். 
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரையிலும் நிகழாண்டு கணக்கீட்டின்படி, 12 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், ஆட்டோ, சரக்கு வாகனங்கள், லாரிகள், பேருந்துகள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட வர்த்தக ரீதியான வாகனங்கள் 50 ஆயிரத்துக்கும் மேல் இயக்கப்படுகின்றன. கார், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை 11 லட்சத்துக்கும் மேல் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், மதுரை மாநகரில் காலை, மாலை வேளைகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுவதோடு மட்டுமின்றி, காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.
அதிகரித்துவரும் காற்று மாசு சராசரி அளவு: மதுரையில் காற்றின் மாசு குறித்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிடும் தகவல்களின் அடிப்படையில், ஆண்டுதோறும் காற்றின் மாசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அதனடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டு காற்று மாசின் அளவு சராசரியாக 65 முதல் 90 மைக்ரோ கிராம்/ கியூபிக் மீட்டர் வரை இருந்துள்ளது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு காற்றின் மாசு குறைந்த அளவு 70 மைக்ரோ கிராமும், அதைத் தொடர்ந்து ஜூலை மாத இறுதியில் குறைந்த அளவு 90 மைக்ரோ கிராமை எட்டியது. 2018 செப்டம்பர் தொடங்கி, டிசம்பர் வரை காற்று மாசு சராசரியாக 100 மைக்ரோ கிராம்/ கியூபிக் மீட்டராகக் கணக்கிடப்பட்டுள்ளது.
நிகழாண்டு ஜனவரி தொடங்கியது முதல் காற்றின் மாசு அளவு 100 மைக்ரோ கிராமுக்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது. இதே நிலைதான் ஜூன் மாதம் வரை நீடித்துள்ளது. அதேநேரம், கடந்த ஜனவரியில் அதிகபட்சமாக காற்றின் மாசு அளவு 130 மைக்ரோ கிராமாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால் விரைவில் காற்றின் மாசு அளவு 200 மைக்ரோ கிராமை எட்டி, புதுதில்லி போன்று மதுரை மாநகர மக்களும் காற்றை சுவாசிக்க முடியாத அபாய நிலைக்குத் தள்ளப்படுவர்.  
புகைப் பரிசோதனை செய்வதில்லை: இது குறித்து மோட்டார் வாகன புகைப் பரிசோதனை மையங்களின் சங்க மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியது: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க, மோட்டார் வாகனங்களுக்கு பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க மோட்டார் வாகனங்கள் உரிய இடைவெளியில் புகைப் பரிசோதனை செய்து சான்றிதழ்கள் பெறவேண்டும். ஆனால், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.       இந்த விதி மீறல்களுக்கு, போக்குவரத்துக் காவல் துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் அபராதம் விதிக்கவேண்டும். ஆனால், வாகனச் சோதனையின்போது, ஓட்டுநர் உரிமம், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்கின்றனர், புகைச் சான்று குறித்து கேட்பதில்லை. இதனால், காற்றில் மாசு அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. வாகனங்கள் உரிய இடைவெளியில் புகைப் பரிசோதனை செய்வதை அரசு உறுதி செய்தால்தான், காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும். மேலும், மதுரை மாநகரில் கரும் புகை கக்கும் அரசுப் பேருந்துகளை நிறுத்திவிட்டு, புதிய பேருந்துகளை இயக்கவேண்டும் என்றார்.
புற்றுநோய் பாதிப்பு:  மதுரையில் வாகனங்கள் வெளியிடும் புகை, சாலைகளிலிருந்து எழும் தூசி, கரும் புகையை கக்கும் பேருந்துகள் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. 
இது குறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் சங்குமணி கூறியது: தமிழகத்தில் காற்று மாசடைவது அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் நோய் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. தற்போதைய சூழலில் புற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. இது ஆபத்தானது, சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.
மரங்கள் வளர்க்க வேண்டும்:      தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு சங்க மாவட்டச் செயலர் மருத்துவர் லிங்கசெல்வி கூறியது:
மதுரையில் காற்று மாசடைவது அதிகரித்திருப்பதற்கு காரணம், சாலைகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதுதான். வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, வேறு மரங்கள் அங்கு நடப்படுவதில்லை.  எங்கள் அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். காற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க, மக்கள் தங்கள் வீட்டின் முன்பாக மரங்களை வளர்க்க வேண்டும். வாகனத்தில் புகை அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புகை வெளியிடும் வாகனங்களை மக்கள் தவிர்த்துவிட்டு, மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.  மின்சார வாகனத்துக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com