ராகிங் புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நிர்வாகம் மீதும் நடவடிக்கை: நீதிபதி

ராகிங்கால் பாதிக்கப்படும் மாணவர்கள் அளிக்கும் புகார்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிர்வாகம் மீது


ராகிங்கால் பாதிக்கப்படும் மாணவர்கள் அளிக்கும் புகார்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்டக் கூடுதல் சிறப்பு நீதிபதி பி. மதுசூதனன் எச்சரித்துள்ளார். 
மதுரை மருத்துவக் கல்லூரி  மாணவர்களுக்கு (கேலி வதை தடுப்புச் சட்டம்), ராகிங் எதிரான சட்டங்கள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட கூடுதல் சிறப்பு நீதிபதி பி. மதுசூதனன் பங்கேற்றுப் பேசியது: 
ராகிங்குக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவர் நாவரசு கடந்த 1996-ஆம் ஆண்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதன்பின்னர், 1997-ஆம் ஆண்டு கேலி வதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ராகிங், கல்லூரி வளாகம் மட்டுமின்றி, கல்லூரி அல்லாத எந்தப் பகுதியில் நடந்தாலும் குற்றம்தான்.
மாணவர்கள் ராகிங் குறித்து புகார் அளித்து, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இடமுள்ளது. மாணவர்கள் ராகிங் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானால், படிக்கும் கல்லூரி மட்டுமின்றி, வேறு எந்தக் கல்லூரியிலும் சேர முடியாது. 
ராகிங் நடைபெறுவதை மாணவர்கள் கண்டும் காணாமல் சென்றால், நாளை நம்மை சார்ந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். 
ராகிங்கை தடுக்க மாணவர்கள் நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், ராகிங் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படத்தை மாணவர்களுக்கு திரையிட்ட நீதிபதி, அது குறித்து பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தார்.
பின்னர், மருத்துவக் கல்லூரி முதல்வர் கே. வனிதா செய்தியாளர்களிடம் கூறியது: ராகிங் பாதிப்புகள் ஏற்படாத வகையில், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்ற மாணவர்களை சந்திக்காத அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கல்லூரி வளாகத்தைச் சுற்றிலும், உயர் ரக ரகசிய  கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி வளாகம் முழுவதும் ராகிங் ஹெல்ப்-லைன் தொலைபேசி எண்ணுடன் கூடிய விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் மட்டுமின்றி, அனைத்துப் புகார்களையும் தெரிவிக்க கட்செவி அஞ்சல் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
ராகிங் குறித்து தகவல் தெரிவிக்க 18001805522 என்ற உதவி எண், காவல் துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், சார்பு-நீதிபதி எஸ். ஹசன்முகமது, காவல் ஆய்வாளர் பெத்தராஜ் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com