அழகப்பா பல்கலை.யில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள்: தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்க துணைத்தலைவர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் காரைக்குடி

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ரஞ்சித் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை கூறியது: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கமும் இணைந்து 15-ஆவது மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளை நடத்த உள்ளன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக உடற்கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 16, 17, 18 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 
இதில் 100, 200, 400, 1500, 5000 மீட்டர் ஓட்டப்போட்டிகள் மற்றும்  4-100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியில் பங்கேற்போர் ஊனத்தின் தன்மையை பொருத்து பார்வையற்றோர், மனவளர்ச்சிக் குன்றியோர், சக்கர நாற்காலியில் இயங்குவோர், கை, கால், பாதிப்பு, குள்ளமானவர்கள் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கேற்ற போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். 
போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்களுக்கு தங்கும் இடம், உணவு வசதி, காரைக்குடி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
 மாநில அளவிலான இப்போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும், தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெறும் மாற்றுத்திறனாளி வீரர்கள் மட்டும் தேசியப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 
 போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது தேசிய அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம்,  எண் 76, இரண்டாம் தளம், மகாலிங்கபுரம் பிரதான சாலை, மகாலிங்கபுரம், சென்னை 600 034 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு சங்க நிர்வாகிகள், ரஞ்சித்குமார் 79043-68119, திருமலைக்குமார் 93946-96312, விக்னேஸ்வரன் 88707-99470, செல்வராஜ் 99431-37089 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com