மதுரையில் "வைகை பெருவிழா' நிறைவு

மதுரையில் அகில  பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழா 2019 நிறைவு விழா மற்றும்

மதுரையில் அகில  பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் வைகை பெருவிழா 2019 நிறைவு விழா மற்றும் அனைத்து சமய, சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டின் முதலாம் அமர்வில் இந்து எழுச்சியே தேசிய எழுச்சி என்ற தலைப்பில் சுவாமி சதாசிவானந்தா, சுவாமி சமானந்தா, சுவாமி சாஸ்வதானந்தா, சுவாமி முருகானந்தா, சுவாமி ஞானசிவானந்தா ஆகியோர் பேசினர். இரண்டாம் அமர்வில் இந்து பண்பாட்டின் சிறப்பு இயல்புகள் என்ற தலைப்பில் மதுரை சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே உதவும். வாழ்க்கையில் பற்றற்றிருப்பது, சேவை மனப்பான்மையோடு இருப்பது, உலகம் மாயை என்பதை புரிந்துகொள்வது, அகங்காரத்திடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது என்று இருக்கும்போது மனிதர்களுக்கு தெளிவு பிறக்கும். இதற்கு மாறாக அகங்காரம், ஆணவத்தோடு இருப்பது நமக்கு கேடு விளைவிக்கும். எனவே வேதங்கள் கூறும் உண்மையை உணர்ந்து, இறைவனின் விருப்பத்துக்கிணங்க ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்து பிறப்பை அறுப்பதே நமது கடமை என்றார். இதில் சுவாமி சிவானந்த சுந்தரானந்தா மற்றும் துறவிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து வைகை பெருவிழா 2019-இன் நிறைவு விழா மாலையில் நடைபெற்றது. இதில் வைகை பெருவிழாவில் பங்கேற்று சேவைப் பணியாற்றியவர்களுக்கு, கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் நினைவுப்பரிசு வழங்கி ஆசியுரை வழங்கினார். இதையடுத்து மாலை 6 மணிக்கு வைகை நதிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. 
இந்த வழிபாட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு குடும்பத்தினருடன் பங்கேற்றார். இதில் தமிழகத்தின் துணை முதல்வர் மகன் ஓ.பி.பிரதீப்குமாரும் பங்கேற்றார். ஆரத்தி வழிபாடு முடிந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியது: 
வைகை பெருவிழா நடத்தியதன் காரணமாக வைகை ஆற்றின் தற்போதைய நிலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நதிகளை காக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வண்ணம் ரூ.68 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது, வைகை ஆற்றை காக்க தமிழக அரசுடன் மக்களும் கரம் கோர்க்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்து திமுக வெற்றி பெற்றதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர். வேலூரில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர். திமுக ஆட்சி காலத்தில் தான் வைகை ஆற்றில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com