அரசு ராஜாஜி மருத்துவமனையில் 7 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் அறைகள்! வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படுமா?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வரும் துறைகளுக்கு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வரும் துறைகளுக்கு, 7 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் அறைகள் ஒதுக்கப்படுமா என மருத்துவர்கள், நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனைக்கு நாள்தோறும் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதால் நோயாளிகள், பொதுமக்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடநெருக்கடியால் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த இடநெருக்கடியைப் போக்க புதிய கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டு சில துறைகள் மாற்றப்பட்டன. அந்த வகையில், விபத்து மற்றும் அவசர தீவிரச் சிகிச்சை பிரிவு பனகல் சாலையில் உள்ள அண்ணா பேருந்து நிலையம் அருகே கட்டடப்பட்ட புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இதே போன்று, பனகல் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் 4 ஏக்கரில் ரூ.150 கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் சிறுநீரக சிகிச்சை, குடல் இரைப்பை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை மற்றும் அவற்றின் அறுவை சிகிச்சை துறைகள் உள்ளிட்ட  7 துறைகள் மாற்றப்பட்டன. மருத்துவமனை முதன்மையர் அலுவலகக் கட்டடத்தில் இருந்து மாற்றப்பட்ட துறைகளின் அறைகள், வேறு எந்த துறைக்கும் தற்போது வரை ஒதுக்கப்படவில்லை. இதனால், இடநெருக்கடி குறையாமல் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பூட்டி கிடக்கும் அறைகள்: இதுகுறித்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கூறியது: இடநெருக்கடியை குறைக்கவும், இடப்பற்றாக்குறை உள்ள மருத்துவத் துறைகளுக்கு காலியாக உள்ள அறைகளை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 7 துறைகளின் சில அறைகள் கடந்த 7 மாதங்களாக பராமரிப்பு இன்றி தற்போது வரை மூடிக் கிடக்கின்றன. இதனால் அவற்றில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கட்டில்கள், படுக்கைகள்,சேதமடைந்து வருகின்றன. மேலும் அறைகளின் சுவர்கள், கழிவறைகள், மின்சாதனங்கள் பாழாகின்றன. இந்நிலையில் இவற்றில் உள்ள இரும்பு பொருள்கள், மின் சாதனப் பொருள்கள் திருடு போவதாகவும் கூறப்படுகிறது. இடநெருக்கடி காரணமாக, இதயம், நுரையீரல் உள்ளிட்ட  துறைகளின் மருத்துவர்களால் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்க முடியவில்லை. போதிய இடவசதி இல்லாததால் நவீன உபகரணங்களை பொருத்த முடியாத நிலை உள்ளது. நிர்வாகத்திடம் இது குறித்து  பலமுறை முறையிட்டும் எந்த பயனுமில்லை. தொடர்ந்து இட நெருக்கடியில் தவிக்கிறோம் என்றனர்.
விரைவில் அறைகள் ஒதுக்கீடு: இதுகுறித்து மருத்துவமனை டீன் கே.வனிதா கூறியது: இம் மருத்துவமனை சர்வதேச அளவில் சிகிச்சை அளிக்கும் வகையில் தரம் உயர்ந்துள்ளது. நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதால் சமாளிப்பதில் சிரமம் உள்ளது. பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட துறைகளின், சில அறைகள் பூட்டி கிடப்பது உண்மை தான்.  முதல் கட்டமாக காப்பீட்டுத் தொகையைக் கொண்டு ரத்த வங்கிக்கு அறை ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மற்றத் துறைகளுக்கு வழங்குவதற்கு முன்னதாக, தேவையான அனைத்து வசதிகளையும் செய்த பிறகே வழங்கமுடியும். அதற்காக பொதுப்பணித் துறை (கட்டடம்) அதிகாரிகள் மூலம் ஜூலை மாதம் அறைகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இப் பணிகளுக்கு தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை பொதுப்பணித் துறையிடம் கோரப்பட்டுள்ளது. மேலும், அறைகளை சீரமைக்க அரசிடம்  அனுமதியும், நிதியும் கோரப்பட்டுள்ளது. உரிய அனுமதி மற்றும் நிதி கிடைத்தவுடன், ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு விடும். பின்னர், உரிய துறைகளுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com