வட்டாட்சியர், விஏஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு: போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் ஆய்வு

தமிழகத்தில் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. 
விருதுநகரைச் சேர்ந்த காளீஸ்வரி தாக்கல் செய்த மனு: என்னுடைய கணவரிடம் சட்டப்படி விவாகரத்துப் பெறாமல், 2 ஆம் திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய 2 ஆவது கணவர் ஏற்கெனவே திருமணமாகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் அரசு ஊழியரான எனது 2 ஆவது கணவர் பணியின் போது உயிரிழந்தார். இதையடுத்து அரசின் கருணை வேலையை வழங்கக்கோரி துறைசார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதற்கு எனது கணவருடைய முதல் மனைவியின் மகள் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் எனது மனு நிராகரிக்கப்பட்டது. 
எனவே எனது மனு நிராகரிக்கப்பட்டதை ரத்து செய்து எனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் முதல் கணவரைச் சட்டப்படி விவாகரத்து செய்யாமல் 2 ஆவது திருமணம் செய்துள்ளார். ஆனால் முதல் கணவருடன் சேர்ந்து விவாகரத்து பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த ஒப்பந்தத்தை ஏற்று கிராம நிர்வாக அலுவலர் விவாகரத்து சான்றிதழ் வழங்கியுள்ளார். இதுபோன்ற சான்றிதழ்கள் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
இதையடுத்து நீதிபதி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திற்கும் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுகின்றன. அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்குக் கூட போலியான சான்றிதழ்களை அவர்கள் அளிக்கின்றனர். வரும் காலங்களில் கிராம நிர்வாக அலுவலகங்களில் சான்றிதழ் அளிப்பது தொடர்பான பதிவேடுகளை தனித்தனியாகப் பராமரிக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும்  கிராம நிர்வாக அலுவலர்களின் சொத்து விவரங்களையும் ஆய்வு செய்து, அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் அதை அவர்களின் பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com