பரோடா வங்கி மண்டல ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 19th August 2019 07:13 AM | Last Updated : 19th August 2019 07:13 AM | அ+அ அ- |

மதுரையில் நடைபெற்ற பரோடா வங்கியின் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் வங்கியின் செயல்பாடு எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மதுரையில் பரோடா வங்கியின் பிராந்திய ஆலோசனைக் கூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைப்பொது மேலாளர் என்.ராகவேந்திரன், உதவிப்பொது மேலாளர் பிரியா குமார், மண்டல மேலாளர் எம்.பி. சுதாகரன், துணை மண்டல மேலாளர்கள் ஏ.எஸ்.பிரசாத் , கே.பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். பரோடா வங்கியின் மதுரை மண்டலத்துக்குள்பட்ட வங்கிக்கிளைகளின் பரிவர்த்தனைகள் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் கடன்களை அதிகரிப்பதற்கும் , புதுமைகளை கொண்டு வருவது குறித்தும், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மூத்த குடிமக்கள், விவசாயிகள், சிறு தொழிலதிபர்கள், பெண்கள் தொழில் முனைவோர், மாணவர்களுக்கு வங்கிச்சேவையை விரிவுபடுத்துவது, பொதுமக்களுக்கு இணக்கமான சேவைகளை தரும் வங்கியாக மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வங்கித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு, தொழில், பண்ணைத்துறை, ஜல்சக்தி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, முத்ரா கடன்கள், கல்விக்கடன்கள், ஏற்றுமதி வணிகக்கடன் போன்ற துறைகளில் வங்கியின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது வங்கியின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து வங்கியின் செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒவ்வொரு பிராந்தியத்தின் கீழ் உள்ள கிளைகளின் ஒப்பீட்டு செயல்திறன் மதிப்பீட்டோடு மண்டல மையங்களுக்கு அனுப்பப்பட்டன. இதன்மூலம் எதிர்காலத்தில் வங்கி செல்லக்கூடிய பாதை மற்றும் நோக்கம் குறித்தும் தெளிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.