"இசை நுட்பங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழர்கள்'

இசை நுட்பங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள் என்று சீர்காழி சிவ.சிதம்பரம் பேசினார்.

இசை நுட்பங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள் என்று சீர்காழி சிவ.சிதம்பரம் பேசினார்.
மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் வெள்ளிக்கிழமை "ஆதி இசையே அருந்தமிழ் இசை' என்ற தலைப்பில் அவர் பேசியது: 
 தமிழ்மொழி உலக மொழிகளில் மூத்த மொழி என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதேபோல் நம்முடைய தமிழ் இசையும் காலத்தால் மிகத் தொன்மையானது. நம்முடைய முன்னோர்கள் குழுவாகக் கூடி அமர்ந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தேடிய போது கண்டிபிடிக்கப்பட்டது இசைக்கலை. இதற்கு நம்முடைய சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. சரிகமபதநி என்னும் ஏழு எழுத்துக்களில் இசை நுணுக்கங்கள் பற்றிய பதிவுகள் இலக்கியங்களில் உள்ளன. நம்முடைய மரபு இலக்கியங்கள் எல்லாமே இசையோடு பாடுவதற்கு ஏற்ற சந்தம் கொண்டவை. பஞ்சமரபு என்னும் நூல் இசையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இயற்கையின் ஒலிகளைப் பயன்படுத்தி இசை மரபுகளை நம் பழந்தமிழர்கள் உருவாக்கினர் என்றார். 
"காலந்தோறும் கணினித்தமிழ்" என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வசுந்தரம் பேசியது: காலத்துக்கேற்ற மாற்றத்தை மொழியில் கொண்டு வரவேண்டும். மாறிவரும் காலத்துக்கு ஏற்ப எந்த மொழி வளம் பெறுகிறதோ, அந்த மொழியே எதிர்கால சந்ததிகளிடம் பாதுகாப்பாகச் சென்றடையும். வருங்காலத் தலைமுறையினரிடம் தமிழ் மொழியை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் கொண்டு சேர்ப்பதற்குக் கணினியைப் பயன்படுத்த வேண்டிய காலக் கட்டாயம் இப்போது உண்டாகியிருக்கிறது. அதன்படி தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட அற்புத மென்பொருள் தான் அம்மா மென்பொருள் என்கிற இணையச் செயலியாகும். மாணவர்கள் இதனைப் பயன்படுத்தித் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதில் ஏற்படுகிற சந்திப்பிழை முதலான சிக்கல்களை எளிதாகக் களையலாம். 
"தன்னம்பிக்கையே படைப்புத்தமிழ்" என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் மருது அழகுராஜ்: கன்னித் தமிழ் கணினித் தமிழ் ஆக மாறி இருக்கும் சூழலில் அதற்கேற்ப நாமும் மொழிப் பணிக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும். தமிழ் படிப்பதற்காக மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டாம். இதர மொழிகளோடு ஒப்பிடும்போது தமிழ்மொழியின் சொற்களுக்குத் தனிச்சிறப்பு உள்ளது. அது எழுத்து வடிவில் என்றாலும் பேச்சு, ஒலி வடிவில் என்றாலும் பொருந்தும். 
உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களையும் இனிய ஒலியாலும் நடைச் சிறப்பாலும் தன்வயப்படுத்தும் காந்த சக்தி தமிழ் மொழிக்கு இருக்கிறது என்றார்.
நிகழ்ச்சியல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பா.அன்புச்செழியன், புலவர் வெற்றியழகன், தெய்வசுந்தரம், பாரதி சுகுமாரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com