மதுரை மாவட்டத்தில் 5 வட்டங்களில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி, திருமங்கலம், வாடிப்பட்டி ஆகிய வட்டங்களில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி, திருமங்கலம், வாடிப்பட்டி ஆகிய வட்டங்களில் முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 
   உசிலம்பட்டியில் நடைபெற்ற முகாமில் 1,812 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.4 கோடியே 70 லட்சத்து 74 ஆயிரத்து 285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். 
 இந்நிகழ்ச்சியில் அவர் பேசியது:
  கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் சிறப்பு முகாமின் வாயிலாகத் தீர்வு காணப்படும்.
வீட்டுமனை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் வீட்டு மனை வழங்கவும், முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்களும் வழங்கப்படும்.
 சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தள்ளுபடி செய்யப்படும் மனுக்களுக்கு, அதற்கான காரணம் குறித்து மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
  மதுரை மாவட்டத்துக்கான கணிப்பாய்வு அலுவலரும், வெளிநாட்டு மனிதவள கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர்,  தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பா.நீதிபதி, கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான், எஸ்.எஸ்.சரவணன்,  கூடுதல் ஆட்சியர்  எஸ்.பி.அம்ரித்,  மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com