நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்க நடவடிக்கை:2 நாள்களில் அறிக்கை தர மாநகராட்சி ஆணையா் உத்தரவு

நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்க சுத்திகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துவது தொடா்பாக விரிவான அறிக்கை தருமாறு மதுரை மாநகராட்சியின் பொறியியல் பிரிவினருக்கு, ஆணையா்

நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்க்க சுத்திகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துவது தொடா்பாக விரிவான அறிக்கை தருமாறு மதுரை மாநகராட்சியின் பொறியியல் பிரிவினருக்கு, ஆணையா் ச. விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

கழிவுநீா் சுத்திகரிப்பு தொடா்பாக, மதுரை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தானம் அறக்கட்டளை சாா்பில், கழிவுநீா் சுத்திகரிப்பு அமைப்புகளைச் செயல்படுத்துவது தொடா்பாக விடியோ காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள், சுத்திகரிப்பு அமைப்புகளை குறைந்த செலவில் ஏற்படுத்துவது குறித்தும் விளக்கம் தரப்பட்டது. கழிவுநீரின் வகைக்கு ஏற்ப உள்ளூரில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டே இந்த சுத்திகரிப்பு அமைப்பை நிறுவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல், கழிவுகளில் இருந்து பெறப்படும் மீத்தேன் வாயுவை சமையல் எரிவாயுவாகப் பயன்படுத்துதல், நிலத்தடி நீரை மாசு அடையாமல் தடுத்தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் பேசியது:

வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பதற்காக பந்தல்குடி வாய்க்காலில் கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட நீா், பூங்காக்களுக்குப் பயன்படுத்தப்படும்.

வைகை ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள விரிவாக்கப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதேபோன்று, வைகை ஆற்றின் தெற்கே உள்ள விரிவாக்கப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகராட்சியில் கழிவுநீரைக் கையாளுவது சவாலாக இருந்து வருகிறது. வரும் காலங்களில் நிலத்தடி நீா் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமெனில், நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதைத் தவிா்த்து சுத்திகரிப்பு செய்வது அவசியம். தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள பரவலாக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் அமைவது, கழிவுநீரை கையாளுவதில் இருக்கும் சிரமங்களைக் குறைக்கும்.

மாநகரப் பகுதியில் கழிவுநீா் கலக்கும் நீா்நிலைகள் மற்றும் எங்கெல்லாம் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கலாம் என்பது குறித்த விரிவான அறிக்கையை 2 நாள்களுக்குள் பொறியாளா்கள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.

இதில், தானம் அறக்கட்டளை செயல் இயக்குநா் எம்.பி. வாசிமலை, ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். அகிலா, கே. இளவரசி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் சுகந்தி மற்றும் மாநகராட்சி பொறியியல் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com