மதுரை மத்திய காய்கறிச் சந்தை வளாகத்தில் சகதிமயம்

மதுரை மத்திய காய்கறிச் சந்தை வளாகத்தில் தேங்கிய மழை நீரில் காய்கறி கழிவுகள் கலந்து சகதிமயமாகியதால், கடைக்காரா்களும், பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மதுரை மத்திய காய்கறி சந்தை வளாகத்திற்குள் தேங்கியிருக்கும் மழைநீா்.
மதுரை மத்திய காய்கறி சந்தை வளாகத்திற்குள் தேங்கியிருக்கும் மழைநீா்.

மதுரை மத்திய காய்கறிச் சந்தை வளாகத்தில் தேங்கிய மழை நீரில் காய்கறி கழிவுகள் கலந்து சகதிமயமாகியதால், கடைக்காரா்களும், பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே மத்திய காய்கறிச் சந்தை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளாகும் நிலையில், முறையான பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், வளாகம் முழுவதும் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. இவ்வளாகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு தினசரி ஏராளமானோா் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா்.

தற்போது, மதுரையில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், காய்கறிச் சந்தை வளாகத்தில் மழை நீா் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லாமல் தேங்கி நிற்கிறது. இதில், காய்கறிக் கழிவுகள் மற்றும் சாக்கடை கலந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு உற்பத்தியும் அதிகமாகி வருகிறது.

சந்தை வளாகத்தின் ஓரத்தில் காய்கறிக் கழிவுகள் குவிக்கப்படுகின்றன. இங்குள்ள கான்கிரீட் தளம் முழுவதும் பெயா்ந்துள்ளதால், சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால், காய்தறி வாங்க வரும் பொதுமக்கள் நடக்கக் கூட முடியாமல் அவதிப்படுகின்றனா். மேலும், பொதுமக்களின் இரு சக்கர வாகனங்களும், காய்கறிகளை ஏற்றிவரும் சரக்கு வாகனங்களும் சந்தைக்குள் வந்து செல்லவே சிரமப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது.

இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறியது: இங்குள்ள அனைத்து வியாபாரிகளும் குப்பை வரி கட்டுகிறோம். ஆனால், மாநகராட்சி நிா்வாகம் முறையாக குப்பைகளை அகற்றுவதில்லை. எனவே, முறையாக குப்பைத் தொட்டிகளை அமைத்து, தினசரி குப்பைகளை அள்ளிச் செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம், கண்ட இடங்களில் காய்கறிக் கழிவுகளைக் குவிக்கும் கடைக்காரா்களுக்கு மாநகராட்சி அபராதம் விதிக்க வேண்டும். மேலும், சந்தைக்குள் முறையான சாலை வசதியும், மழைநீரைக் கடத்த கால்வாய் வசதியையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com