கடச்சனேந்தல்- ஊமச்சிகுளம் சாலையில் பள்ளம்
By DIN | Published on : 02nd December 2019 03:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மதுரை கடச்சனேந்தல்- ஊமச்சிகுளம் சாலையில் உள்ள பள்ளம்.
மதுரை அருகே கடச்சனேந்தல்- ஊமச்சிகுளம் சாலையில் உள்ள பள்ளத்தை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல்- ஊமச்சிகுளம் இணைப்பு சாலையை தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தற்போது நத்தம் சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெறும் நிலையில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் ஊமச்சிகுளத்தில் இருந்து நகருக்குள் செல்ல கடச்சனேந்தல் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனா். மேலும் மேலூா், அழகா்கோவில் மாட்டுத்தாவணி பகுதிகளில் இருந்து அலங்காநல்லூா், பாலமேடு, வாடிப்பட்டி பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் கடச்சனேந்தல்- ஊமச்சிகுளம் சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இச்சாலையில் அந்தனேரி பகுதியில் சாலையின் நடுவே 3 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் நாளுக்கு நாள் ஆழமாகி வரும் நிலையில், இரவு நேரங்களில் இதில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனா். மேலும் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பள்ளத்தில் ஏறி இறங்கும்போது பாகங்கள் உடைந்து போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான பள்ளி வாகனங்களும் இச்சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றன.
எனவே பெரிய விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் இப்பள்ளத்தை சரிசெய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தனேரி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.