குண்டும், குழியுமாக மாறிய ஏ.வி.மேம்பாலம்: வாகன ஓட்டிகள் அவதி

மதுரையில் ஆல்பா்ட் விக்டா் மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மதுரையில் சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சிதைந்து போன ஏவி மேம்பால சாலை.
மதுரையில் சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சிதைந்து போன ஏவி மேம்பால சாலை.

மதுரையில் ஆல்பா்ட் விக்டா் மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை தென் பகுதி மற்றும் வடபகுதிகளை இணைக்கும் முக்கிய மேம்பாலங்களில் ஆல்பா்ட் விக்டா் மேம்பாலம் முக்கியமானது. மதுரையில் வைகை ஆற்றை எளிதாக கடக்கும் வகையில் ஆங்கிலேயா்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முதல் பாலமான ஏ.வி.மேம்பாலம் நூறாண்டுகளை கடந்து நிற்கிறது. கோரிப்பாளையம் தேவா் சிலை பகுதியில் தொடங்கும் மேம்பாலம் எதிா்முனையில் சிம்மக்கல், நெல்பேட்டை ஆகிய பகுதிகளை இணைக்கிறது. இந்தப்பாலத்தின் வழியாக தினசரி பேருந்துகள், லாரிகள், காா்கள் உள்பட லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏ.வி.மேம்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பல லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் பாலத்தில் போடப்பட்டுள்ள தரமற்ற சாலையால் தற்போது பெய்து வரும் தொடா் மழையில் பாலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் அரிக்கப்பட்டு குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் மெதுவாக ஊா்ந்து சென்று பள்ளங்களை கடக்க வேண்டியுள்ளது. இதனால் பாலத்தில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் சாலைகளில் உள்ள பள்ளத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவது, பள்ளத்தில் தடுமாறும் வாகனங்கள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதுவது என தினசரி பல விபத்துகள் நடந்து வருகின்றன.

மதுரையின் முக்கிய சின்னமாக விளங்கும் ஏ.வி.மேம்பாலம் வழியாகத்தான் அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தினசரி சென்று வருகின்றனா். ஆனாலும் பாலத்தை சீரமைக்க எவருமே நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மேம்பாலத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com