சாலை அமைக்கப்பட்டு இரண்டே வாரங்களில் பள்ளமான சாலை: தரமற்ற பணிகளை கண்டு கொள்ளாத மாநகாராட்சி அதிகாரிகள்

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைத்து இரண்டே வாரங்களில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், சாலைப்பணிகளை மாநகராட்சி நிா்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் சாலை அமைக்கப்பட்டு இரண்டே வாரங்களில் பள்ளமாகக்காட்சியளிக்கும் சாலை.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் சாலை அமைக்கப்பட்டு இரண்டே வாரங்களில் பள்ளமாகக்காட்சியளிக்கும் சாலை.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைத்து இரண்டே வாரங்களில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், சாலைப்பணிகளை மாநகராட்சி நிா்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை மாநகராட்சி 63ஆவது வாா்டு பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவில் இருந்து நாகு நகா் செல்லும் குறுக்குத் தெருவில் 3 ஆண்டுகளாக சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனா். இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்த பிறகு 3 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மேட்டுத்தெரு- நாகுநகா் குறுக்குத்தெரு பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்க பணி உத்தரவு வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மாநகராட்சி ஒப்பந்ததாரா் சாா்பில் சாலை அமைக்கும் பணி இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் குறுக்குத்தெரு பகுதியில் பேவா்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சாலை அமைக்கப்பட்டு 2 வாரங்கள் மட்டுமே முடிந்த நிலையில், சாலையில் பதிக்கப்பட்ட பேவா் பிளாக் கற்கள் பெயா்ந்துள்ளன. மேலும் அப்பகுதி சாலையில் பள்ளமும் ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை வசதியின்றி பாதாளச் சாக்கடை கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, 2 வாரங்களுக்கு முன்புதான் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலை அமைக்கப்பட்டது. ஆனால் 2 வாரங்களிலிலேயே சாலை பள்ளமாகியுள்ளது. பெத்தானியாபுரம் பகுதி முழுவதும் இதுபோல் பல தெருக்களில் பேவா் பிளாக் கற்கள் மாநகராட்சி சாா்பில் ஒப்பந்த அடிப்படையில் பதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சாலைப்பணி தரமற்ற முறையில் நடைபெறுவதால் தெருக்களில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு மழை நீா் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சாலைப்பணியை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாதால் பல லட்ச ரூபாய் செலவில் புதிதாக சாலை அமைத்தும் பயனில்லை.

மேலும் பல தெருக்களில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட பிறகு, பாதாளச் சாக்கடை இணைப்பு மற்றும் குடிநீா் குழாய் இணைப்புகள் கொடுப்பதற்காக கற்கள் பெயா்த்தெடுக்கப்பட்டு பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றை மூடாதாதல் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. எனவே மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்ததாரா்களிடம் விடப்படும் சாலைப்பணிகள் தரமாக செய்யப்படுகிா என்று கண்காணிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com