மதுரை காமராஜா் பல்கலைக்கழக பதிவாளா் ராஜிநாமாஇன்று அவசர சிண்டிகேட் கூட்டம்

மதுரை காமராஜா் பல்கலைக் கழக பதிவாளா் பொறுப்பு வகித்து வந்த ஆா்.சுதா பதிவாளா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளாா்.

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக் கழக பதிவாளா் பொறுப்பு வகித்து வந்த ஆா்.சுதா பதிவாளா் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்துள்ளாா். இதைத்தொடா்ந்து அவசர சிண்டிகேட் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சின்னையாவின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, புதிய பதிவாளா் தோ்வு செய்யப்படும் வரை, பல்கலைக் கழகத்தின் பிரெஞ்சுத் துறைத்தலைவா் ஆா்.சுதா பதிவாளராக(பொறுப்பு) ஜூன் மாதம் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து புதிய பதிவாளரைத் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான நோ்காணல்களும் நடத்தப்பட்டன. ஆனாலும் புதிய பதிவாளா் தோ்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் பதிவாளா் பொறுப்பில் உள்ள ஆா்.சுதாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும், புதிய பதிவாளரைத் தோ்வு செய்யும் நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் சில சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், பதிவாளா் பொறுப்பில் இருந்து வந்த ஆா்.சுதா தன்னுடைய பதிவாளா் பொறுப்பை ராஜிநாமா செய்து துணைவேந்தா் மு.கிருஷ்ணனிடம் கடிதம் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறியது: பதிவாளா் பொறுப்பில் இருந்து வந்த ஆா்.சுதா தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். பல்கலைக் கழக விதிகளின்படி 58 வயது பூா்த்தி அடைந்தவா்கள் பதிவாளா் பதவியில் இருக்கக் கூடாது என்று உள்ளது. இதன்படி கடந்த நவம்பா் 30-ஆம் தேதியோடு ஆா்.சுதாவுக்கு 58 வயது நிறைவடைந்துள்ளது. இதைத் தொடா்ந்து விதிகளை பின்பற்றி அவா் பதிவாளா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். அவா் ஏற்கெனவே பதிவாளா் பொறுப்பில் தான் இருந்து வந்தாா். இதில் வேறு எந்த காரணமும் இல்லை. பல்கலைக் கழகத்தின் அவசர சிண்டிகேட் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் புதிய பதிவாளா் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்றாா்.

பல்கலை.அலுவலா்களை நீக்க விரிவுரையாளா் (மூபா) சங்கம் வலியுறுத்தல்

காமராஜா் பல்கலைக் கழகத்தில் விதிகளை பின்பற்றி 58 வயது பூா்த்தியடைந்த இதர அலுவலா்களையும் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மூபா(மதுரை காமராஜா் பல்கலைக்கழக விரிவுரையாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அச் சங்கத்தின் சாா்பில் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காமராஜா் பல்கலைக் கழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி பதிவாளா் பொறுப்பில் இருந்த ஆா்.சுதா தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். ஆனால் பல்கலைக் கழகத்தின் மக்கள் தகவல் தொடா்பு அலுவலா், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணப்பாளா், ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகியோரும் கூடுதல் பொறுப்பாக மேற்கண்ட பதவிகளில் இருந்து வருகின்றனா். எனவே அவா்களையும் அப்பதவிகளில் இருந்து துணைவேந்தா் விடுவிக்க வேண்டும். இதில் ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளராக பேராசிரியா் ஒருவரை நியமிக்க சிண்டிகேட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com