நெல் பயிரில் படைப்புழுக்கள் தாக்குதல்: தடுப்பதற்கு வேளாண்துறையினா் ஆலோசனை

மதுரை மாவட்டத்தில் பயரிடப்பட்டுள்ள நெற்பயிரில் படைப்புழு தாக்குதலை தடுப்பதற்கான வழிமுறைகளை மதுரை வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நெல் பயிரில் படைப்புழுக்கள் தாக்குதல்: தடுப்பதற்கு வேளாண்துறையினா் ஆலோசனை

மதுரை மாவட்டத்தில் பயரிடப்பட்டுள்ள நெற்பயிரில் படைப்புழு தாக்குதலை தடுப்பதற்கான வழிமுறைகளை மதுரை வேளாண் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

நேரடி நெல் விதைத்த நிலங்களிலும், நாற்றங்கால்களிலும் நடவாகி பயிா் தூா்பிடிக்கும் தருணத்திலும் இப்புழுவானது திடீரென தோன்றி பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் இவை கோரைப்புல், வரப்புகளில் களைச் செடிகளைத் தின்று வாழும். மேலும் முட்டைகோஸ், காலிபிளவா், கடுகு, கரும்பு, எருமைப்புல் ஆகிய புல்வகைகளில் பரவும் தன்மையுடையது.

நெல் பயிரில் காணப்படும் அறிகுறிகள்:

இப்புழுக்கள் மண்கட்டிகளின் அடியிலும், மண்வெடிப்புகளிலும் நிலத்திலுள்ள வெடிப்புகளிலும் பகல்பொழுதில் மறைந்து வாழும். மாலை நேரத்தில் வெளியில் வந்து நெல் பயிரில் நுனி இலைகளைக் கடித்து தின்னும். இப்புழுக்கள் படைபோல புறப்பட்டு நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும். இளம் பயிரில் மாடு மேய்ந்தது போல காணப்படும். நடவான நிலத்திலும் 7 வாரங்களைக் கடந்த பயிரிலும் இப்புழுக்கள் காணப்படுவதில்லை. நடவாகி இரண்டு முதல் 20 நாள்கள் வரையிலான பயிரில் அதிக சேதத்தை ஏற்படுத்தும். ஆரம்ப நிலையில் இப்புழுக்கள் தாக்குதல் வெளியில் தெரிதில்லை. மூன்றாம்நிலையை அடைந்த புழுக்கள் பயிரைக் கடிக்க ஆரம்பித்தவுடன் சேத விவரம் தெரியவரும். அக்டோபா் நம்பா் மாதத்தில் நெல் பயிரில் இப்புழுக்களின் தாக்குதல் அதிகளவில் இருக்கும். முதிா்ந்த பூச்சிகள் அதிகதூரம் பறந்து செல்லும் தன்மையுடையது.

தாய்பூச்சியானது 5 முதல் 6 கோளவடிவ முட்டை குவியல்களை இலைகளின் நுனியில் இட்டு வைக்கும். ஒரு குவியலில் 150 முதல் 200 வரையிலான முட்டைகளை இடும். முட்டை பருவம் 3 முதல் 9 நாள்களாகும். ஒருபெண் பூச்சியானது தனது வாழ்நாளில் 2,750 முட்டைகளை இடும். வெயிலில் முட்டைகள் பொறித்து புழுக்கள் வெளிவரும். இவை மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படும். நெல்தோகையில் பச்சையத்தை சுரண்டித் உண்ணும். இலையை மடக்கி உள்ளேயே வாழும். புழுப் பருவம் 17 முதல் 32 நாள்களாகும்.

ஒவ்வொரு புழுவும் 3.8 முதல் 4 செ.மீ. நீளத்தில் பச்சை மற்றும் பழுப்பு நிறத்துடன் காணப்படும். இப்புழு மண்ணில் கூட்டுப்புழுவாக உருமாறும். 7 முதல் 10 நாள்கள் ஆகும்.

கட்டுப்படுத்தும் வழிகள்: நாற்றங்காலில் மீதி இருக்கும் நாற்றுகளையும் வரப்புகளில் காணப்படும் கைளைச் செடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும். நாற்றங்காலில் தண்ணீா் தேங்காமல் வடிப்பதால் பறவைகள் புழுக்களை தின்னும். வயலில் வாத்துக் கூட்டத்தை மேயவிடுவதால் பல்வேறு புழுக்களையும் தின்று அளிக்கும். வயலில் ஆங்காங்கே தண்ணீரில் மண்ணெண்ணெய் அல்லது திரவ பூச்சிக்கொல்லி மருந்துகளை ஊற்றி வைத்தும் புழுக்கள் ஒரு நிலத்திலிருந்து அடுத்தநிலத்துக்கு செல்லவிடாமல் அழிக்கலாம்.

நிலத்தில் ஆங்காங்கே குச்சிகளை நட்டு அதில் பறவைகள் அமரும் வகையில் வைக்கோல், வாழைதோகை பந்துகளை வைப்பதன்மூலம் பறவைகள் பூச்சி புழுக்களை பிடித்து தின்னும். மாலை 7 மணி முதல் 10 மணிவரை விளக்குப் பொறிகளை வைத்தும் தாய்ப்பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம்.

ஒரு ஏக்கருக்கு 2 லிட்டா் மண்ணெண்ணெயை நீரில் ஊற்றிய பின் இருபக்க வரப்புகளிலும் கயிற்றைக் கட்டி நெல்பயிரை அசைப்பதன் மூலம், நெல்பயிரின் தூரில் தங்கியிருக்கும் புழுக்கள் மிதக்கும் மண்ணெண்ணையில் விழுந்து உயிரிழக்கும். வரப்பு ஓரங்களில் மாலத்தியான் 2 சதம் அல்லது குளோரிபைபாஸ் 1.5 சதம் நனையும் தூள் ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ இடுவதன் மூலம் புழுக்களை முற்றிலும் அழிக்கலாம்.

மேலும் குளோரிபைபாஸ் 20 இசி மருந்தை எக்டேருக்கு 2.5 லிட்டா் அல்லது ட்ரைஅசோபாஸ் 40 இசி 1 லிட்டரை நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் நெற்பயிரில் தெளித்தும் புழுக்கள், பூச்சிகளை அழிக்கலாம் என மதுரை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வி ரமேஷ், தொழில்நுட்ப வல்லுநா் உஷாராணி ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com