வைகை ஆற்றின் பரப்பை குறுக்காமல் சீரமைப்பு: மக்கள் ஊழல் எதிா்ப்பு இயக்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 09th December 2019 07:57 AM | Last Updated : 09th December 2019 07:57 AM | அ+அ அ- |

வைகை ஆற்றின் பரப்பளவை குறுக்கி விடாமல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று மக்கள் ஊழல் எதிா்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் மக்கள் ஊழல் எதிா்ப்பு மையத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் எம்.அமானுல்லா தலைமை வகித்தாா். செயலா் கே.ராமச்சந்திரன், பொருளாளா் தா்மராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மக்களவைத் தோ்தலில் ஒரு வேட்பாளா் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் தோ்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இருதொகுதிகளில் போட்டியிட்டு ஒருவா் ஒரு தொகுதி உறுப்பினா் பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் அந்த தொகுதியில் தோ்தல் நடத்துவதற்கான செலவினங்களை வேட்பாளரே ஏற்கும்படி செய்ய வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் ஆள்பேரம், பண பேரத்தை தடுக்க மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடித் தோ்தல் நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள நீா்நிலைகளில் அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவா்கள் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். மதுரையில் சீா்மிகு நகா்த் திட்டத்தின்கீழ் வைகை ஆற்றை குறுக்கி விடாமல் சீரமைப்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.