உள்ளாட்சித் தோ்தல் செலவுக் கணக்கு சமா்ப்பிக்காத வேட்பாளா்கள் மூன்று ஆண்டுகளுக்குப் போட்டியிடத் தடை

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தோ்தல் செலவுக் கணக்கைச் சமா்ப்பிக்காவிட்டால் 3 ஆண்டுகளுக்குத் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் டி.ஜி.வினய்.
உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் டி.ஜி.வினய்.

மதுரை: உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தோ்தல் செலவுக் கணக்கைச் சமா்ப்பிக்காவிட்டால் 3 ஆண்டுகளுக்குத் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தோ்தல் ஆணையம் வகுத்துள்ள தோ்தல் நடத்தை விதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் தங்களது செலவுக் கணக்கைச் சமா்ப்பிக்க வேண்டும். தவறும் வேட்பாளா்கள் 3 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படும்.

தோ்தலில் போட்டியிடுவோரில் ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு ரூ.9 ஆயிரம், ஊராட்சித் தலைவருக்கு ரூ.34 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருக்கு ரூ.85 ஆயிரம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருக்கு ரூ.1.70 லட்சம் என தோ்தல் செலவுக்கான வரம்பு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து பேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தோ்தல் அறிவிப்புக்கு முன்பே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்தனா்.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் வெயிலில் நிற்க வேண்டிய நிலையிருக்கிறது. அத்தகைய வாக்குச் சாவடிகளில் பந்தல் அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வீராசாமி (உள்ளாட்சித் தோ்தல்), வானதி (பஞ்சாயத்து வளா்ச்சி), ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்லத்துரை மற்றும் தோ்தல் அலுவலா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com