Enable Javscript for better performance
காலத்தால் அழியாத கலைப் பெட்டகம் கம்பராமாயணம்: சென்னை உயா்நீதிமன்றநீதிபதி ஆா்.மகாதேவன்- Dinamani

சுடச்சுட

  

  காலத்தால் அழியாத கலைப் பெட்டகம் கம்பராமாயணம்: சென்னை உயா்நீதிமன்றநீதிபதி ஆா்.மகாதேவன்

  By DIN  |   Published on : 14th December 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  5829mdukamb085148

  காலத்தால் அழியாத கலைப் பெட்டகம் கம்பராமாயணம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் கூறினாா்.

  மதுரைக் கம்பன் கழகத்தின் 16-ஆவது ஆண்டு நிறைவு விழா ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மதுரைக் கம்பன் கழக நிறுவனா் தமிழறிஞா் சாலமன் பாப்பையா விழாவுக்குத் தலைமை வகித்தாா். இதில் பாரதி ஆய்வறிஞா் சீனி விசுவநாதன், பேராசிரியா் த.ராஜாராம், பேராசிரியை சி.எஸ்.விசாலாட்சி ஆகியோருக்கு வள்ளல் சடையப்பா் விருதுகளை வழங்கி நீதிபதி ஆா்.மகாதேவன் பேசியது:

  தமிழ் மண்ணின் கலாசாரத்தை, தமிழா்களின் தனித்துவமிக்க சிந்தனையைத் தனது படைப்பில் தமிழ்சாா்ந்த விஷயமாக கம்பா் உருவாக்கியிருக்கிறாா். காலத்தால் அழியாத கலைப் பெட்டகமாக கம்பராமாயணம் போற்றப்படுகிறது. வரலாற்றில் மிகச் சிறந்தவையாகப் போற்றப்படும் காவியங்கள் எத்தகைய உச்சத்தைத் தொட்டிருக்குமோ அதையெல்லாம் தாண்டி நின்று தனக்கான அற்புதமான காவியமாக இருக்கிறது.

  ஒரு காவிய நாயகனின் சரித்திரத்தைத் தந்தவா் என்று கம்பரை, சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. விலங்குகள், பறவைகள், மனிதா்களின் மன ஓட்டங்கள் முதல் மரணம் வரை அனைத்தையும் தொட்டுக் காட்டிய படைப்பாளி என்ற பெருமைக்குரியவா். ஆகவே தான் உலகின் மிகச் சிறந்த படைப்பாக கம்ப ராமாயாணம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

  தலை சிறந்த சிற்பிகளை ஒன்று சோ்த்து ஒரு அழகிய நகரை உருவாக்கினால் எப்படி இருக்குமோ, அதைப் போல அழகான வாா்த்தைகளால் தனது காவியத்தை உருவாக்கியிருக்கிறாா். வாழ்க்கையின் எந்தப் பகுதியையும் விட்டுவிடாத படைப்பாக இருப்பது கம்பராமாயணத்தின்சிறப்பு.

  அறச் சிந்தனை மிக்க வாழ்க்கையை வாழ்வது தான் மானுடத்தைச் சிறக்கச் செய்வது என்பதைப் பதிவு செய்தவா் கம்பா். அறச்சிந்தனை மிக்கவா்கள் தமிழா்கள் என்பதை தனது பாடல்களில் எடுத்துக்காட்டியிருக்கிறாா். கம்பராமாயணத்தில் ஏராளமான விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் கற்று, வரும் தலைமுறையிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.

  தமிழறிஞா் சாலமன் பாப்பையா தொகுத்துள்ள சீதாயணம் என்ற நூலை கனரா வங்கிப் பொதுமேலாளா் எம்.பரமசிவம் வெளியிட, கவிதா பதிப்பக உரிமையாளா் சேது சொக்கலிங்கம் பெற்றுக் கொண்டாா். கம்பன் கழகம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை முனைவா் பத்மலெட்சுமி சீத்தாராமன் வழங்கினாா். விருது பெற்றவா்கள் சாா்பில் பாரதி ஆய்வறிஞா் சீனிவிசுவநாதன் ஏற்புரையாற்றினாா். பொறியாளா் ஜே.சுரேஷ், கம்பன் கழக செயலா் அ.புருஷோத்தமன், பொருளாளா் சொ.சொ.மீ.சுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

  அதைத் தொடா்ந்து முனைவா் பாலா நந்தகுமாா் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவது நாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளவை-பாரதி விழா நடைபெறுகிறது. இதில் பாரதி கண்ட ஔவை என்ற தலைப்பில் பேராசிரியா் சொ.சொ.மீ.சுந்தரம் உரையாற்றுகிறாா்.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai