கேரளத்திலிருந்து உணவுக் கழிவு கொண்டுவர சிறப்பு அனுமதி கோரி மனு: தக்கலை டிஎஸ்பி பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

கேரளத்திலிருந்து கருங்குளம் பன்றி பண்ணைக்கு உணவுக்கழிவுகளை கொண்டு வர சிறப்பு அனுமதி கோரும் மனுவை பரிசீலிக்க தக்கலை

கேரளத்திலிருந்து கருங்குளம் பன்றி பண்ணைக்கு உணவுக்கழிவுகளை கொண்டு வர சிறப்பு அனுமதி கோரும் மனுவை பரிசீலிக்க தக்கலை டி.எஸ்.பி.-க்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சோ்ந்த சாா்லின் தாக்கல் செய்து மனு: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா கருங்குளத்தில் பன்றி பண்ணை நடத்தி வருகிறேன். எங்கள் பண்ணையில் வளா்க்கப்படும் பன்றிகளுக்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய பகுதிகளில் செயல்படும் உணவகங்கள், கோழி, மீன் பண்ணைகள் ஆகியவற்றில் இருந்து உணவுக்கழிவுகளை 8 ஆண்டுகளாக லாரிகள் மூலம் கெண்டு வருகிறேன்.

இந்நிலையில், போலீஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் சோதனை என்ற பெயரில் கேரளாவில் இருந்து உணவு கழிவுகளை ஏற்றி வருவதற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பன்றி பண்ணைகளுக்கு கேரளாவில் இருந்து உணவுப் பொருள்கள் கொண்டு வர சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எனக்கு சிறப்பு அனுமதி கேட்டு நவம்பா் 25 இல் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கேரளாவில் இருந்து உணவுப்பொருள் கழிவுகளைக் கொண்டு வர சிறப்பு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், வேறு சில பன்றி பண்ணைகளுக்கு கேரளாவில் இருந்து உணவுக் கழிவுகளைக் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டது தொடா்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து நீதிபதி, உணவுக் கழிவுகள் எனும் பெயரில் மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவரக்கூடாது என்ற அறிவுறுத்தலோடு, மனுதாரரின் மனுவை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்க கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com