உள்ளாட்சித் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 25th December 2019 07:52 AM | Last Updated : 25th December 2019 07:52 AM | அ+அ அ- |

உள்ளாட்சித் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும் என பெண்கள் முன்னேற்ற ஆதார மையம் வலியுறுத்தியுள்ளது.
இம்மைதத்தின் சாா்பில் தலித் மற்றும் ஆதிவாசி பெண் வேட்பாளா்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சிக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தலித், ஆதிவாசி பெண்களின் தோ்தல் செலவை அரசு ஏற்க வேண்டும். மேலும் அவா்கள் சுயசாா்புடன் செயல்படவும், அவா்களுக்குப் போதிய நிதி ஒதுக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பெயரளவில் மட்டும் உள்ள தீண்டாமை வன்கொடுமை சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும். உள்ளூா் மானியத்தைக் குறைக்கும் கொள்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். நிலச் சீரமைப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மானியத்துடன் விவசாய இடுபொருள்களை வழங்க வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் காலந்தாழ்த்தாமல் கிடைக்கச் செய்ய வேண்டும். தலித், ஆதிவாதி பெண் தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். துப்புரவுப் பணியாளா்கள் குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டப் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் தலித், ஆதிவாசி மற்றும் பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றவுடன் உள்ளாட்சி மன்றங்களை வலுப்படுத்த வேண்டும். ஜனநாயக அதிகாரத்திற்கு உள்பட்டு சுதந்திரமாக செயல்பட்டு தங்களின் அடித்தள அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளவேண்டும் என பெண்கள் முன்னேற்ற ஆதார மையத்தின் இயக்குநா் மனோகரிதாஸ் வலியுறுத்தினாா்.
மதசாா்பற்ற ஜனதாதள மாநில பொதுச்செயலாளா் ஜான்மோசஸ், மதிமுக தொழிற்சங்கத் தலைவா் மகபூப்ஜான், ஹெச்.ஆா்.எப்-சென்னை நிறுவனப் பயிற்சியாளா்கள் சித்ரா, தாஸ் ஆகியோா் பங்கேற்றனா்.