திருப்பரங்குன்றத்தில் மகோதய புண்ணிய காலம் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு
By DIN | Published On : 02nd February 2019 07:50 AM | Last Updated : 02nd February 2019 07:50 AM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகோதய புண்ணிய காலத்தையொட்டி, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் செ. மாரிமுத்து விடுத்துள்ள செய்திக் குறிப்பு: அமாவாசை, வியதிபாத யோகம், திருவோண நட்சத்திரம் ஆகிய மூன்றும் ஒரே நாளில் திங்கள்கிழமை (பிப்.4 ) அமைவதால், அதனை மகோதய புண்யகாலம் எனக் கூறுவர்.
அன்றைய தினம் திருப்பரங்குன்றம் கோயிலில் காலை 9 மணியளவில் விநாயகர் சப்பரத்திலும், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, பெரிய ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் சத்தியகிரீஸ்வரர், சிறிய ரிஷப வாகனத்தில் கோவர்தனாம்பிகை அம்மன், சப்பரத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி சரவண பொய்கையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமிகள் நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்து வருகிறது என அதில் தெரிவித்துள்ளார்.