வகுப்பறையில் செல்லிடப்பேசி பறிமுதல்: மனமுடைந்த மாணவர் தற்கொலை
By DIN | Published On : 02nd February 2019 07:49 AM | Last Updated : 02nd February 2019 07:49 AM | அ+அ அ- |

மதுரையில் வகுப்பறைக்கு கொண்டு சென்ற செல்லிடப்பேசியை கல்லூரி நிர்வாகம் பறிமுதல் செய்ததால், மனமுடைந்த மாணவர் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பைரவமூர்த்தி (18). மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இக்கல்லூரியில், வகுப்பறைக்கு மாணவர்கள் செல்லிடப்பேசியை கொண்டு வரக் கூடாது என்று, நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பைரவமூர்த்தி வியாழக்கிழமை கல்லூரிக்கு செல்லிடப்பேசி கொண்டு சென்றுள்ளார். இதையறிந்த கல்லூரி நிர்வாகம், அவரது செல்லிடப்பேசியை பறிமுதல் செய்ததுடன், விளக்கம் அளிக்கும்படியும் தெரிவித்துள்ளது. இதனால் மனமுடைந்த பைரவமூர்த்தி, வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தொடர்பாக, அவரது தாய் செல்வராணி அளித்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.