ஓய்வுபெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை: தம்பதி உள்பட 3 பேர் பிடிபட்டனர்
By DIN | Published On : 12th February 2019 07:25 AM | Last Updated : 12th February 2019 07:25 AM | அ+அ அ- |

மதுரை அழகர்கோவில் தங்கும் விடுதியில், ஓய்வுபெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தம்பதி உள்பட 3 பேர் திங்கள்கிழமை பிடிபட்டனர்.
விருதுநகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (69). இவர் விருதுநகர் மாவட்ட காவல்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வுபெற்றவர்.
இந்நிலையில், அழகர்கோவில் கோயில் நிர்வாகத்தின் தங்கும் விடுதியில் கடந்த 2 ஆம் தேதி, தங்கராஜ், பெண் மற்றும் இரு குழந்தைகளுடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், 3 ஆம் தேதி விடுதி ஊழியர்கள் அறைக்குச் சென்று பார்த்தபோது, தங்கராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவருடன் தங்கியிருந்த பெண், குழந்தைகளை காணவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக அப்பன்
திருப்பதி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் கொலை வழக்குத் தொடர்பாக தனிப்படையும் அமைக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், தங்கராஜூடன் அறை எடுத்து தங்கியது காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த குமார் மனைவி நாகலட்சுமி என்பது தெரியவந்தது. அதையடுத்து, தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த நாகலட்சுமி, அவரது கணவர் குமார், அவரது நண்பர் வசந்த் ஆகிய மூவரும் பிடிபட்டனர். பின்னர் மூவரையும் தனிப்படை போலீஸார் மதுரைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தங்கராஜ் விருதுநகரில் பல வீடுகள் வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டில் நாகலட்சுமியின் தாய் வசித்து வந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து தாய் வீட்டுக்கு நாகலட்சுமி வரும்போது, வாடகை பாக்கி தொடர்பாக தங்கராஜ் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று நாகலட்சுமி தனது மகள் மற்றும் மகனுடன் அழகர்கோவிலுக்கு வந்துள்ளார். அவர்களுடன் தங்கராஜூம் வந்து அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தங்கராஜை கொலை செய்ததாகத் தெரிகிறது. கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.