சுடச்சுட

  

  ஈமச்சடங்கு செய்வதில் தகராறு: இரு தரப்பினர் மோதலில் கல்வீச்சு: கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி

  By DIN  |   Published on : 13th February 2019 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் ஈமச்சடங்கு செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீச்சும் நடைபெற்றது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். 
  கள்ளிக்குடியை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் திங்கள்கிழமை இறந்தார். ஆதிதிராவிடருக்கு என கடந்த 2015 இல் ஒதுக்கப்பட்ட பூசாரிக்குளம் பகுதியில் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வேறு சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் ஈமச்சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் கல்வீசி தாக்கிக் கொண்டனர்.  இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 
  அப்போது மூதாட்டியின் சடலத்தை நான்கு வழிச்சாலையில் வைத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஈமச்சடங்கு செய்ய அனுமதிக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
  தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஈமச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர்.  இதையடுத்து  பொதுமக்கள்  மறியலைக்  கைவிட்டனர். இதன்  காரணமாக நான்கு வழிச்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
  இதுகுறித்து கள்ளிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai