சுடச்சுட

  

  "தமிழகத்தின் புதிய தலைமை யார் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்'

  By DIN  |   Published on : 13th February 2019 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தின் புதிய தலைமை யார் என்பதை வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலர் தங்க. தமிழ்ச் செல்வன் கூறினார்.
   முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா முன்னேற்பாடுகள் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையை அடுத்த ஒத்தக்கடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் தங்க. தமிழ்ச்செல்வன் பேசியது:
  கடந்த மக்களவைத் தேர்தலின்போது வடமாநிலங்களில் பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும் என்ற அலை வீசிய நேரத்தில், தனித்துப் போட்டியிட்டு அதிமுகவை வெற்றி பெற வைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரும், திமுக தலைவர் கருணாநிதி என இரு தலைவர்கள் இல்லாத நிலையில் தமிழகத்துக்கான புதிய தலைமை யார் என்பதை இந்த மக்களவைத் தேர்தல் தீர்மானிக்கப்போகிறது.  அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் புதிய தலைவராக உருவாகப் போவது நிச்சயம்.  
  ஜெயலலிதா ஆட்சி எனக் கூறிக் கொண்டு பாஜகவின் பேச்சை கேட்கக் கூடிய நிலையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால், அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளில் அமமுக எளிதில் வெற்றிபெறும்.
  அமமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். ஆகவே, மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை கட்சியினர் உடனடியாகத் தொடங்க வேண்டும். பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகளைத் தொடங்க வேண்டும். 
  அதேபோல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட கட்சியினர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
  அமமுகவின் ஜெயலலிதா பேரவைச் செயலர் மாரியப்பன் கென்னடி, இளைஞர் அணிச் செயலர் டேவிட் அண்ணாதுரை, மகளிரணி செயலர் வளர்மதி ஜெபராஜ், எம்ஜிஆர் மன்ற செயலர் பரமநாதன்,  மாவட்டச் செயலர்கள் செ.சரவணன், இ.மகேந்திரன், மா.ஜெயபால், ஷ.ராஜலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai