சுடச்சுட

  

  மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை: சிறு, குறு விவசாயிகள் கணக்கெடுப்புப் பணி தீவிரம்

  By DIN  |   Published on : 13th February 2019 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசு அறிவித்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகள் கணக்கெடுப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
   நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டிலேயே இத் திட்டம் தொடங்கப்படுவதால்,  பயனாளிகள் விவரம் சேகரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  
   விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாக, பயனாளிகள் பட்டியலை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 
   இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியது:
   நஞ்சை நிலமாக இருப்பின் 2.5 ஏக்கர், புஞ்சை நிலமாக இருப்பின் 5 ஏக்கருக்கு மிகாமல் இருப்பவர்கள் இத் திட்டத்தில் பயன்பெறலாம்.  இத்தகைய சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து அவர்களது நிலத்துக்கான சிட்டா நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல், புகைப்படம் ஆகியன இணைக்கப்பட்ட விண்ணப்பம் பெறப்படுகிறது.
   விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை,  அன்றைய தினமே வருவாய் ஆய்வாளர் மூலமாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்ப  கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், எவ்வளவு விரைவாக தகுதியான விவசாயிகளிடம் விண்ணப்பங்களைப் பெற முடியுமோ, அந்த அளவுக்கு இப் பணியில் தீவிரம் காட்டுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
   இதன்படி, தினமும் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பட்டியல் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது தினமும் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும்
  குறைந்தபட்சம் 50  விண்ணப்பங்கள் வரை பெறப்படுகிறது என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai