மக்களவைத் தேர்தல்: வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவு

மக்களவைத் தேர்தலுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து தேவையான

மக்களவைத் தேர்தலுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன்  அறிவுறுத்தினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலுக்கான முன்னேற்பாடு குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில் ஆட்சியர் நடராஜன் பேசியது: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும் சம்பந்தப்பட்ட பேரவைத் தொகுதி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கட்டடத்தின் உறுதித் தன்மை, மின்வசதி, குடிநீர், கழிப்பிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஆய்வு தளம்  ஆகிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே தேர்தல் நடத்தை விதிகளை  அனைத்து அலுவலர்களும் நன்கு தெரிந்து வைத்திருப்பது அவசியம். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் தேர்தல் விதிகளின்படி பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்கள் குறித்த பட்டியலை முன்னதாகவே தயார் செய்து அந்தந்த துறை அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்களிப்பதை உறுதி செய்யும் "விவிபேட்' இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
 கூடுதல் ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரவீன்குமார்,  மாநகராட்சி துணை ஆணையர் மணிவண்ணன் , ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர்,  ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்லத்துரை, பேரூராட்சிகளின்  உதவி இயக்குநர் ஜெயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com