அழகர்கோவிலில் பிப்.19 இல் தெப்பத் திருவிழா
By DIN | Published On : 14th February 2019 09:20 AM | Last Updated : 14th February 2019 09:20 AM | அ+அ அ- |

மாசி பெளர்ணமியை முன்னிட்டு, அழகர்கோவில் பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள தெப்பத்தில் வரும் 19 ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் மாதந்தோறும் ஒரு திருவிழா நடைபெற்று வருகிறது. மாசி பெளர்ணமிக்கு முதல் நாள் கஜேந்திரமோட்சம் வைபவம், வரும் 18 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை நடைபெறவுள்ளது.
இதைமுன்னிட்டு, சுந்தரராஜப்பெருமாள் மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள வாவிதீர்த்தக் குளத்துக்கு எழுந்தருள்கிறார். அங்கு முதலைவாயில் சிக்கிய யானையை மீட்கும் கஜேந்திரமோட்சம் வைபவம் நடைபெறும்.
பொய்கைக் கரையில் அழகர்: அழகர்கோவில்- மதுரை சாலையில் உள்ள பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள தெப்பக்குளத்துக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜப்பெருமாள் பல்லக்கில் பிப்.19-இல் (செவ்வாய்க்கிழமை) புறப்பாடாகிறார்.
அழகர்கோவிலில் இருந்து வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளிய பின்னர், தெப்பக்குளத்தை வந்தடைகிறார். தற்போது குளத்தில் நீர் இல்லாததால் குளக்கரையை வலம்வந்து கரையில் உள்ள திருக்கண் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அன்று மாலையிலும் சுந்தரராஜப்பெருமாள் குளக்கரையை வலம்வந்து இரவு கோயிலுக்குத் திரும்புகிறார்.