காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு: காவலர் தற்கொலை
By DIN | Published On : 14th February 2019 09:18 AM | Last Updated : 14th February 2019 09:18 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி காலனியைச் சேர்ந்த வனராஜா மகன் சதீஸ் (27). இவர், பழனியில் சிறப்பு காவல்படையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், சதீஸ் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவரையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்த சதீஸ், மீண்டும் தனது திருமணம் குறித்து பெற்றோரிடம் கேட்டாராம். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த சதீஸ், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த உசிலம்பட்டி தாலுகா போலீஸார் அங்கு சென்று சதீஸின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.