சாமானியர்களையும் கதை நாயகர்களாக மாற்றியது ரஷிய இலக்கியங்களே: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

சாமானிய மனிதர்களையும் கதை நாயகர்களாக மாற்றியது ரஷிய இலக்கியங்கள் மட்டுமே என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார்.

சாமானிய மனிதர்களையும் கதை நாயகர்களாக மாற்றியது ரஷிய இலக்கியங்கள் மட்டுமே என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசினார்.
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மதுரை மாநகர் சார்பில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 
 மதுரை விக்டோரியா எட்வர்டு அரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தமுஎகச நிர்வாகி ஸ்ரீரசா தலைமை வகித்தார். இதில், "ரஷிய இலக்கியங்களை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
எனது வாழ்க்கையில் ரஷிய இலக்கியங்கள் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதது. ரஷியா என்பது ஒரு நாடு மட்டுமல்ல. அது மக்களின் கனவு. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற நாட்டு மக்களின் எதிர்பார்ப்பால் உருவான தேசம். மக்களின் உழைப்பால், புரட்சியால் மக்களுக்காகவே எழுந்த தேசம் ரஷியா. 
அதனால் தான் மகாகவி பாரதி, "ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி' என்று ரஷியாவை பாராட்டி எழுதினார். 
 எனது 20 ஆவது வயதில் ரஷிய இலக்கியங்களை தேடி படிக்கத் தொடங்கினேன். சங்க இலக்கியங்கள், புறநானூறு, அகநானூறு, தொல்காப்பியம் போன்றவற்றைப் படித்த அதே ஈடுபாட்டோடு ரஷிய இலக்கியங்களையும் படித்தேன். உலகில் உள்ள தலைசிறந்த இலக்கியங்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதல் இரண்டு இடத்தை ரஷிய இலக்கியங்களே பிடிக்கும். 
உலகின் தலைசிறந்த இலக்கியவாதிகள் என்று பட்டியலிட்டால் அதிலும் முதல் இரண்டு இடங்களை ரஷிய எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், தஸ்தாவஸ்கி ஆகிய இருவரும் பிடிப்பர்.
 இவர்கள் மட்டுமின்றி மாக்சிம் கார்க்கி, அண்டான் செகாவ், ஒஸ்திரோவ்ஸ்கி, புஸ்கின், இவான் துர்க்மனேவ் உள்பட ஏராளமான இலக்கியவாதிகள் ரஷியாவில் இருந்தனர். புரட்சிக்கு முந்தைய ரஷியாவில் ஜார் மன்னரின் ஆட்சியில் நாட்டில் பெரும் வறுமை நிலவியது. ஏழைகளுக்கு ரொட்டி கூட கிடைக்கவில்லை. 
பண்ணை அடிமைகளை உருவாக்கியதே ரஷிய பிரபுக்கள்தான். இதையெல்லாம் எழுத்தின் மூலமாக வெளிக் கொணர்ந்தவர்கள் ரஷிய படைப்பாளிகள். அதுவரை எழுத்தின் நாயகர்களாக போரில் வெற்றி பெற்றவர்கள், நில பிரபுக்கள், வரலாறு படைத்தவர்கள் போன்றவர்கள் மட்டுமே இருந்தனர். 
ஆனால், சாமானிய மனிதனையும், அன்றாட வாழ்க்கையில் அவர்கள் படும் அவதிகளையும் மாபெரும் இலக்கியங்களாக படைத்தது ரஷிய இலக்கியம். 
அந்த வகையில் உலகில் உள்ள அனைத்து மொழி இலக்கியங்களிலும் சாமானிய மனிதனின் வாழ்க்கை பதிவு செய்யப்படுகிறது என்றால், அதற்கு ரஷிய படைப்பாளிகள் தான் முன்னோடிகள். மக்களின் வாழ்க்கையை, அரசின் அதிகாரங்களை எதிர்த்தும், மத நிறுவனங்களை அம்பலப்படுத்தியும் எழுதியதால் ரஷிய படைப்பாளிகள் சைபீரிய சிறைகளில் அடைக்கப்பட்டு உயிரையும் தியாகம் செய்துள்ளனர். 
ஆனாலும் அவர்கள் எழுத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. கதைகளின் மையமாக பாக்தாத் நகரம் சொல்லப்படுகிறது. வணிகர்களின் நகராக திகழ்ந்த பாக்தாத்துக்கு வரும் ஒவ்வொரு நாட்டு வணிகரும் கதையை உருவாக்கியதால், பன்னாட்டு கதைகளின் பெட்டகமாக பாக்தாத் திகழ்ந்தது. ஆனால், என்னைப் பொருத்தவரை உலகக் கதைகளின் தாயகம் மதுரை மட்டுமே. மதுரையின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு கதை உண்டு என்றார்.  
முன்னதாக அ.ந.சாந்தாராம் வரவேற்றார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன், மாநில நிர்வாகி மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பாராட்டிப் பேசினர். முடிவில் மானுடன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com