சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தக்கோரி மனு:தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்குமாறு,

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு அரசு பதிலளிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
 இதுதொடர்பாக தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வழக்குரைஞர் கு.மணவாளன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் மத்திய அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. மாநில அரசுகள் அளித்திடும் பல்வேறு சேவைகளில் வெளிப்படையான தன்மை, நேர்மை மற்றும் அதிகாரிகள், இதர அலுவலர்களின் பொறுப்புகளை உறுதி செய்வதற்காக மாநிலங்களில் சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
மத்திய பிரதேசம், பிகார், புதுதில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்பட 20 மாநிலங்களில் சேவை பெறும் உரிமை சட்டம் அமலில் உள்ளது.
 இச்சட்டத்தின்படி, மாநில அரசின் பல்வேறு சேவைகள் மக்களுக்கு அளிக்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இழப்பீடு பெறவும், அலுவலர்கள் தண்டிக்கப்படவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, ஓட்டுநர் உரிமம், வாகன சான்றிதழ் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்த 10 நாள்களிலும், குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், நிலப்பட்டா ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த 30 நாள்களிலும் சேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
  தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் அமலில் இல்லாததால் பட்டா, குடும்ப அட்டை உள்பட பல்வேறு சேவைகளுக்கு மக்கள் ஆண்டு கணக்கில் அலையும் நிலை உள்ளது. எனவே, தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றி, அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக உள்துறை முதன்மை செயலர், சட்டத்துறை முதன்மை செயலர், பொது நிர்வாகத்துறை முதன்மை செயலர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com