மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஆட்சியர் உத்தரவு

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
 மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வரவுள்ள நிலையில், அதற்கு முந்தைய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் மதுரை மக்களவைத் தொகுதியில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெறுகின்றன. மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்படுகிறது.
  திருப்பரங்குன்றம், திருமங்கலம் பேரவைத் தொகுதிகள் விருதுநகர் மக்களவைத் தொகுதியிலும்,  சோழவந்தான், உசிலம்பட்டி பேரவைத் தொகுதிகள் தேனி மக்களவைத் தொகுதியிலும் இடம் பெறுகின்றன. மேற்குறிப்பிட்ட பேரவைத் தொகுதிகளுக்குரிய மின்னணு இயந்திரங்கள் அந்தந்த மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
 மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். இம்மையத்தில் 6  பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியே வாக்குகள் எண்ணும் அறை அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பேரவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் அறைக்கு அருகிலேயே,  அந்தந்த தொகுதிக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறையும் அமைக்கப்படுகிறது.
 வாக்கு எண்ணும் அறைகள்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறைகளை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மதுரை மாநகரக் காவல் துணை ஆணையர் சசிமோகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர்,  மாநகராட்சி துணை ஆணையர் ப.மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஆய்வின் போது வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள்,  வாக்கு எண்ணும் நாளன்று வாக்கு எண்ணும் அலுவலர்கள் வரும் பகுதி, வேட்பாளர்களின் முகவர்கள் வரும் பகுதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்குமாறு ஆட்சியர் நடராஜன் அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com