விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் திட்டம்: மதுரை மாவட்டத்தில் முதல் தவணை நிதி வழங்கல்

மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் திட்டத்தின் கீழ் (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி)

மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் திட்டத்தின் கீழ் (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். 
 இதில் மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் முதல் தவணை நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் தவணை நிதியுதவி காசோலையை வழங்கிப் பேசியது: 
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு ஏற்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து குறுகிய காலத்தில் அதை செயல்படுத்தியும் உள்ளார். பிரதமரின் இத் திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள 12 கோடி சிறு, குறு விவசாயிகள் பயனடைவர். தமிழகத்தில் 69 லட்சம் பேர் பயனடைவர். மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 1 லட்சம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட  பயனாளிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
91,128 பயனாளிகள் தேர்வு: மதுரை வருவாய் மாவட்டத்தில் 658 கிராமங்கள் உள்ளன. இதில் 636 கிராமங்களில் "பிரதம மந்திரி கிசான் சம்மான்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் திருமங்கலம் வட்டத்தில் 7,416 பேர், மேலூர் வட்டத்தில் 21,162 பேர், கள்ளிக்குடி வட்டத்தில் 1,034 பேர், வாடிப்பட்டி வட்டத்தில் 10,750 பேர், மதுரை தெற்கு வட்டத்தில் 1,657 பேர், உசிலம்பட்டி வட்டத்தில் 15,579 பேர், திருப்பரங்குன்றம் வட்டத்தில் 2,721 பேர், மதுரை வடக்கு  வட்டத்தில் 3,436 பேர், மதுரை கிழக்கு வட்டத்தில் 4,222 பேர், மதுரை மேற்கு வட்டத்தில் 1,366 பேர், பேரையூர் வட்டத்தில் 14,781 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 91,128 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் முதல் தவணையாக செலுத்தப்படும் என ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் தாமதத்தால் விவசாயிகள் அவதி: "பிரதம மந்திரி கிசான் சம்மான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கே ஆட்சியர் அலுவலக  கூட்ட அரங்கில் அமர வைக்கப்பட்டனர். ஆனால் பகல் 1 மணி வரை நிகழ்ச்சி தொடங்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். 
இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் பிற்பகல் 1.30 மணிக்கு வந்த பிறகே நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு விவசாயிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com