முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
துபையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு காப்பீடு தொகையை தர மறுப்பதாக புகார்
By DIN | Published On : 28th February 2019 08:13 AM | Last Updated : 28th February 2019 08:13 AM | அ+அ அ- |

துபையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகை வழங்க மறுப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு உள்பட்ட ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் ஜி.செந்தில்குமார் (39). இவர் 2017 இல் துபைக்கு சென்று, கொத்தனாராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, செந்தில்குமார் இறந்துவிட்டதாக தகவல் வந்ததுள்ளது.
அதையடுத்து அவரது உடலை பெற்றுத் தர வலியுறுத்தி, செந்தில்குமாரின் மனைவி முத்தீஸ்வரி மற்றும் குடும்பத்தினர், கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில், செந்தில்குமாரின் உடல், வியாழக்கிழமை (பிப்.28) சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என துபையில் உள்ள நிறுவனம் தகவல் தெரிவித்தது.
இதனிடையே செந்தில்குமார் குடும்பத்தினருக்கு சேர வேண்டிய காப்பீடு தொகை ரூ. 7.50 லட்சத்தை அந்நிறுவனம் தர மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முத்தீஸ்வரி மற்றும் குடும்பத்தினர், செந்தில்குமார் உடலையும், இழப்பீடு தொகையையும் பெற்றுத் தரவேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.