முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்
By DIN | Published On : 28th February 2019 08:13 AM | Last Updated : 28th February 2019 08:13 AM | அ+அ அ- |

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மதுரை ரயில் நிலையத்திலும் புதன்கிழமை முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீதான இந்திய விமானப்படையின் தாக்குதல் மற்றும் இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள சம்பவத்தால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் ரயில் மற்றும் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை மாலையில் இருந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரை ரயில் நிலையம் மற்றும் மதுரையில் இருந்து புறப்படும் மற்றும் மதுரை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்கள், ரயில் நிலைய நடைமேடைகள், பயணிகளின் உடைமைகள், ரயில்களில் அனுப்பப்படும் சரக்குகள் போன்றவற்றை மோப்ப நாய் கொண்டு ரயில்வே பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை சோதனையிட்டனர்.