கிரானைட் முறைகேடு: சகாயம் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய கம்யூ. மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் வலியுறுத்தல்
By DIN | Published On : 04th January 2019 07:37 AM | Last Updated : 04th January 2019 07:37 AM | அ+அ அ- |

மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு வெளியிடுவதுடன், அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் வலியுறுத்தினார்.
மேலூர் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சகாயம் ஆணையம் அளித்த கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேலூர் தாலுகா செயலர் மெய்யர் தலைமை வகித்தார்.
இதில் கலந்து கொண்டு முத்தரசன் பேசியதாவது: மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உ.சகாயம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான மலைகள், கண்மாய்கள், புறம்போக்கு நிலங்கள் ஊருணிகள், விவசாய நிலங்களை அபகரித்து கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என சகாயம் அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையை தமிழக அரசு வெளிட்டு, அதன்மீது குற்ற நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும். கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு குவிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும். மேலும் அனைத்து குவாரிகளையும் அரசே நேரடியாக நடத்த வேண்டும். உண்மையான குவாரித் தொழிலாளர்களை அரசு குவாரிகளில் பணியமர்த்த வேண்டும். கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கைகளை உடனே துவங்க வேண்டும். இக்கோரிக்கைகளை பாஜக ஏற்றுக் கொண்டால் நாளையே ஆட்சியர் அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த எங்கள் கட்சி தயாராக உள்ளது என்றார்.