முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையில் மின்சாரம் பாய்ச்சி சிறுமியை கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது
By DIN | Published On : 04th January 2019 07:37 AM | Last Updated : 04th January 2019 07:37 AM | அ+அ அ- |

மதுரையில் வீட்டு வாடகை தகராறில் 9 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மதுரை பேச்சியம்மன் படித்துறை வியாசராயர்புரம் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் (38). இவரது மனைவி ராஜலட்சுமி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இதில் வாடகை சரியாக தராததால் கணேஷ்குமாரை வீட்டை காலி செய்யுமாறு மணிவண்ணன் தரப்பினர் கூறியுள்ளனர். ஆனால் கணேஷ்குமார் கால அவகாசம் கேட்டு அதே வீட்டில் இருந்து வருகிறார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கணேஷ்குமாரின் மகள் ஹரிணி (9) வீட்டு முன் கடந்த சனிக்கிழமை விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீட்டு உரிமையாளர் மணிவண்ணனின் மகன் சந்தோஷ்ராஜ் (25), வீட்டை காலி செய்யாததால் கணேஷ்குமார் மீதுள்ள ஆத்திரத்தில் சிறுமி ஹரிணியை தூக்கிச்சென்று அவரது கழுத்தில் மின்வயரைச்சுற்றி மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய சந்தோஷ்ராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் சிறுமியின் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் இருந்த காயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அதுகுறித்து கேட்டபோது, சந்தோஷ்ராஜ் மின்சாரம் பாய்ச்சியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக ஹரிணியின் தாய் ராஜலட்சுமி அளித்தப் புகாரின் பேரில் திலகர்திடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்தோஷ்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.