வைகை ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் உத்தரவு
By DIN | Published On : 05th January 2019 07:59 AM | Last Updated : 05th January 2019 07:59 AM | அ+அ அ- |

வைகை ஆற்றில் மதுரை மாவட்ட பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் முள்புதர்கள் அகற்றும் பணியை விரைவில் தொடங்குமாறு பொதுப்பணித் துறை கூடுதல் செயலர் எம்.பாலாஜி உத்தரவிட்டார்.
பொதுப்பணித் துறையின் மதுரை மண்டலத்தில் உள்ள நீர்வளஆதார அமைப்பு பொறியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், அத்துறையின் கூடுதல் செயலர் எம்.பாலாஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொதுப்பணித் துறையின்கீழ் உள்ள ஏரி, குளம், கண்மாய், ஆறுகளின் தற்போதைய நிலை மற்றும் வைகை அணை மற்றும் அனைத்து நீர்நிலைகளின் நீர் இருப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கரைகளைப் பலப்படுத்துதல், நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கு திட்டமிடுதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்தந்த வடிநில கோட்டங்களின் பொறுப்பு அதிகாரிகள், நீர்நிலை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கைகளை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து வைகை ஆற்றுப் பகுதியை கூடுதல் செயலர் நேரில் ஆய்வு செய்தார். வைகை ஆற்றுப் படுகையில், சிற்றணை முதல் மதுரை காமராஜர் பாலம் வரை மதுரை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 35 கி.மீ.-க்கு சீமைக்கருவேல மரங்கள், முள்புதர்களை அகற்ற அரசுக்கு கருத்துரு சமர்ப்பித்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ரா.செல்வராஜ், கண்காணிப்புப் பொறியாளர் க.அன்பரசு, செயற்பொறியாளர் த.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.