பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஆதார் அட்டை அவசியம்
By DIN | Published On : 07th January 2019 08:21 AM | Last Updated : 07th January 2019 08:21 AM | அ+அ அ- |

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு, குடும்ப அட்டைதாரர்கள் தங்களது மின்னணு அட்டையுடன், ஆதார் அட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் தற்போது பிஓஎஸ் இயந்திரம் மூலமாக அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. மின்னணு அட்டையை இந்த இயந்திரத்தில் ஸ்கேன் செய்தால், அவர்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களின் பட்டியல் காண்பிக்கும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு விரும்பிய பொருள்கள், கடையில் உள்ள இருப்பைப் பொருத்து பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது பிஓஎஸ் இயந்திரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை உறுதி செய்வதற்கான மென்பொருள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
அதில் மின்னணு அட்டை மற்றும் மின்னணு அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்ட குடும்ப நபர்களில் யாரேனும் ஒருவரது ஆதார் அட்டையையும் ஸ்கேன் செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கும் வகையில் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பெறச் செல்லும்போது மின்னணு அட்டையுடன், குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆதார் அட்டையையும் எடுத்துச் செல்வது அவசியம் என்று கூட்டுறவுத்துறையின் பொதுவிநியோகத் திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.