சுடச்சுட

  

  தைப் பொங்கல் அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
   அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவது தொடர்பாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்களிடையே பிரச்னை எழுந்தது. இப்பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில்  ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்யத் தொடங்கியது. மாநகராட்சி உதவி ஆணையர் பிரேம்குமார் தலைமையில்  சுகாதார ஆய்வாளர் ஜான் பீட்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர் தடுப்பு வேலி அமைக்கும் பணியில் ஊழியர்கள்  ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெற இன்னும் 4 நாள்கள் மட்டுமே உள்ளதால் நவீன இயந்திரங்களுடன் மாநகராட்சி பணியாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் தடுப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  கிராமத்தினர் மகிழ்ச்சி: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததால்  காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தாரை தப்பட்டை, மேளத்துடன், காளைகளுடன் அவனியாபுரம் மந்தையம்மன்  கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
  இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியது: இந்த வருடம் ஐல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற அச்சத்தில் இருந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை,  தனி ஆணையர் தலைமையில் கிராமத்தினர் பங்கு பெறும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
  மாடுபிடி வீரர்களுக்கு இன்று அனுமதி சீட்டு: அவனியாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளியில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
  மாடுபிடி வீரர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாடு பிடிக்க விருப்பமுள்ளவர்கள் மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வயதுக்கான சான்றிதழாக,  ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பள்ளி சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலுடன் வர வேண்டும். தகுதியானவர்களுக்கு மாடு பிடிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு வாங்கியவர்கள் ஜல்லிக்கட்டு நாளன்று மருத்துவரின் பரிசோதனைக்கு பின்பு மாடு பிடிக்க  அனுமதிக்கப்படுவர் என மதுரை தெற்கு வட்டாட்சியர் சுந்தரம் முருகன் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai