சுடச்சுட

  

  ரஜினி, அஜீத் படங்களுக்கு கூடுதல் கட்டண வசூல்:  திரையரங்குகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 12th January 2019 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் திரையிடப்பட்டுள்ள 22 திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என  ஆய்வு செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
   மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாண்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் 2018  நவம்பர் 6 இல் வெளியானது. இத்திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
  இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதனால் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
  இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது,  சர்கார் திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் 8 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சர்க்கார் திரைப்படத்துக்கு வசூலித்தது போல், ரஜினி நடித்த பேட்ட, அஜீத் நடித்த விஸ்வாசம் திரைப்படங்களுக்கும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  இதையடுத்து நீதிபதிகள், மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் வெளியான 22 திரையரங்குகளிலும் கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு திரையரங்குக்கு 3 பேர் வீதம் வருவாய்த் துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்குரைஞர்கள் அடங்கிய  குழுக்களை அமைத்தனர்.  இந்தக் குழுக்கள் மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு ஜனவரி 17 வரை நேரில் சென்று ஆய்வு நடத்தி, ஜனவரி 18 இல் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai