சுடச்சுட

  

  உசிலம்பட்டி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் கைது

  By DIN  |   Published on : 13th January 2019 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கடனை அடைக்க பணம் தர மறுத்த மனைவியை, சனிக்கிழமை அதிகாலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
  உசிலம்பட்டி அருகேயுள்ள எழுமலையைச் சேர்ந்த முத்தையாத் தேவர் மகன் ராமர் (70). இவரது மனைவி ராசம்மாள் என்ற ராசாத்தி (65). இவர்களுக்கு, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனராம். 
  உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ராமர் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், ராசாத்தி கேரளத்தில் கூலி வேலை செய்து மாதந்தோறும் வீட்டுக்கு வந்து செல்வாராம். இதனால், ராமர் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி வீட்டிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
  இந்நிலையில், அரசு வழங்கும் பொங்கல் பரிசுப் பொருளை வாங்குவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை ராசாத்தி ஊருக்கு வந்துள்ளார். ரேஷன் கடைக்குச் சென்ற இவர், பொங்கல் பரிசாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
  அப்போது, சாப்பாட்டுக்காக அருகில் உள்ளவர்களிடம் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் எனக் கூறிய ராமர், தனது மனைவியிடம் ரூ. 500 கேட்டுள்ளார். ஆனால், ராசாத்தி பணம் தர மறுத்துவிட்டாராம். இதனால், இரவு இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
  அதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராசாத்தியின் தலையில் ராமர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், ராசாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
  அதன்பின்னர், ராமர் எழுமலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். 
  சம்பவ இடத்துக்குச் சென்ற எழுமலை போலீஸார், ராசாத்தியின் சடலத்தைக் கைப்பற்றி, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் நிலைய ஆய்வாளர் முத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai