சுதேசி சிந்தனைதான் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

உள்ளூர் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி சிந்தனை தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு

உள்ளூர் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி சிந்தனை தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்று வாழும் கலை மைய நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.
 மதுரையில் வெள்ளிக்கிழமை சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய மாநாட்டைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:
  இன்றைய சூழலில் வெளிநாட்டு மோகத்தால் மக்களிடையே தவறான மனமாற்றம் ஏற்பட்டு வருகிறது. பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. நமது கலாசாரம், பண்பாட்டைக் காக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
   அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில அமைப்புகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நமது தொழில், வர்த்தகம், விவசாயம் சார்ந்த அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்துப் போராடி வருகின்றன. அத்தகைய செயல்பாடுகளைக் கண்டறிந்து அவை தொடராமல் தடுக்க வேண்டும்.
 குக்கிராமங்களில் கூட தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. இதைப் போல பல துறைகளிலும் அவற்றின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இதனால் நமது உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்கின்றனர். 
 சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் சுமார் 6 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சுயசார்பு பொருளாதாரத்தை வளப்படுத்த முடியும். குறிப்பாக இளைஞர்களுக்கு சுதேசி சிந்தனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது. சுதேசி சிந்தனையுடன் செயல்பட்டால் தான் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்றார்.
  நிகழ்ச்சியில், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் அருண் ஓஜா, இணை அமைப்பாளர் ஆர்.சுந்தரம், துணை அமைப்பாளர் அஸ்வினி மகாஜன், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பேரன் சிதம்பரம், வி.வி.வி. குழும நிர்வாக இயக்குநர் வி.ஆர்.முத்து உள்ளிட்டோர் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com